Last Updated : 13 Dec, 2023 08:32 PM

 

Published : 13 Dec 2023 08:32 PM
Last Updated : 13 Dec 2023 08:32 PM

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும் பொது மயானம் இல்லை: உயர் நீதிமன்றம் வேதனை

மதுரை: சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகியும் பொது மயானம் இல்லாதது துரதிஷ்டவசமானது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டம் புத்தாநத்ததில் இஸ்லாமியர்களின் பொது அடக்க ஸ்தலத்தை சுன்னத்வால் ஜமாத் நிர்வாகித்து வருகிறது. இங்கு தவ்ஹீத் ஜமாத்தை பின்பற்றுவர்களுக்கு தனி அடக்க ஸ்தலம் இருந்தது. அந்த அடக்க ஸ்தலம் குடியிருப்புவாசிகளின் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டது. இதையடுத்து, தவ்ஹீத் ஜமாத்தை பின்பற்றுபவர்களில் யாராவது இறந்தால், அவர்களின் உடல்களை சுன்னத்வால் ஜமாத் பராமரிப்பில் உள்ள அடக்க ஸ்தலத்தில் அடக்கம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: சுதந்திரம் பெற்ற 75 ஆண்டுளாகியும் சாதி, மதம் கடந்து உடல்களை அடக்கம் செய்ய பொது மயானம் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு தனித்தனியாக அடக்க ஸ்தலங்கள் உள்ளன. இந்துக்களில் எஸ்சிக்கு தனியாகவும், பிற சாதியினருக்கு தனியாகவும் மயானங்கள் உள்ளன. பிற மதத்திலும் இந்த பாகுபாடு உள்ளது. இறப்பவர்களின் உடல்களை உரிய நேரத்தில் அடக்கம் செய்யாவிடாமல் தடுப்பதால் சடலத்தின் கண்ணியம் பாதிக்கப்படும், சுகாதார பாதிப்பும் ஏற்படும்.

இறப்பவர்களின் உடல்களை உரிய பழக்க வழக்கப்படி அடக்கம் செய்யாவிட்டால் இறந்தவரின் குடும்பத்தினர் அடையும் மன உளைச்சலை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இறந்தவரின் உடல் 24 மணி நேரத்தில் அழுகத் தொடங்கும். இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய அனுமதி கோரி இந்த மனு தாக்கல் செய்ய தூண்டப்பட்டது மரணத்தை விட சோகமானது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காண வேண்டும்.

இந்த வழக்கில் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், கிராம மேம்பாட்டுத்துறை செயலாளர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கிறது. அனைவரையும் சமமாக கருதி இறப்பவர்களின் உடல்கள் நம்பிக்கை மற்றும் பழக்க வழக்கத்தை பின்பற்றி அடக்கம் செய்வதை உறுதி செய்யும் வகையில் ஒருங்கிணைந்த சட்டம் கொண்டு வர வேண்டும். இது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும். இனிமேல் எந்த குடும்பங்களும் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி கோரி நீதிமன்றத்தில் கதவுகளை தட்டாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x