

மதுரை: ‘அனுமதி பெறாத கட்டிடங்களின் காடாக மதுரை மாநகர் மாறி வருகிறது’ என உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த மதன் குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை விளாங்குடியில் அரசுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆக்கிர மிப்புகளை அகற்ற மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே விளாங்குடியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் 5 ஆண்டுகளாக மாநகராட்சி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யாததால், ஆணையர் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வில் விசா ரணைக்கு வந்தது. மாநகராட்சி ஆணையர் மதுபாலன் ஆஜராகி, அனுமதியில்லாத கட்டிடங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற் றப்படும் என்றார். இதையடுத்து நீதிபதிகள், மதுரை மாநகரம் அனுமதியில்லாத கட்டிடங்களின் காடாக மாறி வருகிறது. சென்னை, பெங்களூரு போன்ற நகரங்கள் சட்ட விரோதக் கட்டுமானங்களால் பாழடைந்து வருகின்றன. அந்த வரிசையில் மதுரையும் மாறுவது வேதனை தருகிறது. சென்னையில் தற்போது ஏற் பட்டுள்ள நிலைமையை போல் மதுரையின் நிலைமையும் மாறி விடக் கூடாது. அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டுவோர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி செய்தால்தான் ஏழைகளையும், விதி களை பின்பற்றுவோரையும் பாது காக்க முடியும்.
மாநகராட்சியுடன், காவல்துறை இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்றமுடியும். அபராதம் விதிப்ப தோடு விட்டுவிடக் கூடாது. அனுமதி பெறாத கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும். அனுமதியற்ற கட்டிடங்களால் மக்கள் நிம்மதியின்றி வாழ வேண்டி யுள்ளது. இவற்றை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கலாம். நீதிமன்றம் தலையிடாமல் இருக்க முடியாது. அதிகாரிகள் தினமும் ஆய்வு நடத்தி, அனுமதியற்ற கட்டிடங்களை கண்டறிந்து போலீஸார் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இவ் வாறு உத்தரவில் கூறியுள்ளனர்.