Published : 13 Dec 2023 06:12 AM
Last Updated : 13 Dec 2023 06:12 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் விநியோகிக்கப்படும் தண்ணீரின் நிறத்தில் திடீரென மாற்றம் ஏற்பட்டதால், தலைமை நீரேற்றும் நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்தினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்கு முதல் குடிநீர் திட்டம் 1948-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதற்காக ஆழியாறு ஆறு, பாலாறு இணையும் இடத்தில் அம்பராம்பாளையத்தில் ஆற்றில் நடுவே குடிநீர் கிணறுகள் அமைக்கப்பட்டன. தினமும் ஆற்றிலிருந்து 10.50 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, அங்குள்ள தலைமை நீரேற்றும் நிலையத்தில் 24 மணி நேரம் சுத்திகரிக்கப்பட்ட பின்னர், பொள்ளாச்சி நகராட்சிக்கு கொண்டு வரப்படுகிறது.
இந்நிலையில், நகரில் பல்வேறு பகுதிகளிலுள்ள 9 மேல்நிலைத் தொட்டிகள் மூலமாக நகராட்சியிலுள்ள 17,405 குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. மேலும், வழியோர கிராமங்களான ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சியிலுள்ள நஞ்சேகவுண்டன்புதூர், காளிபாளையம், குஞ்சிபாளையம், வசியபுரம், போடிபாளையம், நாயக்கன்பாளையம் ஆகிய கிராமங்களுக்கும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி நகராட்சியில் விநியோகிக்கப்படும் தண்ணீரின் நிறம் மாறியிருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொறியாளர் உமாதேவி, நகர்மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர், அம்பராம்பாளையத்தில் ஆழியாறு ஆற்றிலுள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கூறும்போது, ‘‘கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மண் கலந்து செந்நிறமாக தண்ணீர் வந்துள்ளது. பாலாற்றின் தண்ணீர் கலந்து நீரேற்று நிலையத்துக்கு வருவதால், குடிநீரின் நிறம் மாறியுள்ளது என தெரியவந்தது. குளோரின் அளவை அதிகரித்து சுத்திகரிப்பு பணி அதிகப்படுத்தி உள்ளதால், தற்போது தண்ணீர் தெளிவாக உள்ளது. குடிநீர் விநியோகிப்பதை முறைப்படுத்துவதற்காக, கூடுதலாக 2 பம்ப்செட் மோட்டார்கள், வால்வு, புதிய மின்மாற்றி ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பொருத்தப்பட்ட பின்னர், நகராட்சியிலுள்ள 36 வார்டுகளிலும் வரும் பிப்ரவரி மாதத்தில் இருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT