மிக்ஜாம் புயல் | சென்னையில் டிச.14-ல் இலவச மருத்துவ முகாம்: விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் 25 இடங்களில் வரும் டிச.14-ம் தேதி காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை, விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது என்று அந்த இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மிக்ஜாம் புயல் காரணமாக, பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகின்ற டிச.14ம் தேதியன்று காலை 8.05 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் 25 இடங்களில் பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்க உள்ள இம்மருத்துவ முகாம்கள் வழியாக குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

பொதுமக்களின் நலன் காக்கும் இம்மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in