

சென்னை: புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்கள் தவிர யாருக்கு, எந்த ஆவணத்தின் அடிப்படையில் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கலாம் என்பது குறித்து நிதி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும்வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.6 ஆயிரம், உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் ரூ.5 லட்சம், கால்நடை இழப்பு, வீடு சேதம், பயிர் இழப்பு, படகு சேதம் உள்ளிட்டவற்றுக்கு இழப்பீடு என நிவாரணத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதில், பொதுமக்களுக்கு வழங்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணத்தை நியாயவிலை கடைகளில் ரொக்கமாக வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. 4 மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தம் 36.75 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 27 லட்சம் முதல் 30 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு நிவாரணத் தொகை கிடைக்கும் என கூறப்படுகிறது.
அதாவது, சென்னை மாவட்டத்தின் அனைத்து பகுதிகள்,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்பாதிக்கப்பட்ட தாலுகாக்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான கணக்கெடுப்புகள் தொடங்கப்பட்டு, மாவட்டநிர்வாகங்கள் சார்பில் அரசுக்கு பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குடும்ப அட்டை இல்லாதவர்களிடம் வேறு ஆவணங்களை பெற்று, நிவாரணம் வழங்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை தவிர்த்த மற்ற மாவட்டங்களில் எந்த தாலுகாக்கள், பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன, குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து நிதி, வருவாய் துறையினர் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். நேற்றும் இந்த ஆலோசனை தொடர்ந்தது. இதில் எடுக்கும் முடிவின்படி, அரசாணை மற்றும் வழிகாட்டுதல்கள் இன்று வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது. அதன் அடிப்படையில் வரும்16-ம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும். பிறகு, குறிப்பிட்ட தேதியில் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது.