சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூரில் சனிக்கிழமை 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்

சைதாப்பேட்டை பகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிவாரண உதவிகளை வழங்கினார்.
சைதாப்பேட்டை பகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிவாரண உதவிகளை வழங்கினார்.
Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை (டிச.9) 3,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும். அதில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 1,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ளிக்கிழமை நிவாரண உதவிகளை வழங்கினேன். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மக்கள் நல்வாழ்வுத் துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த அக்.23 தொடங்கி தற்போது வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் முகாம் 1000 என்று அறிவிக்கப்பட்டு 2000-த்துக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது.

அந்த வகையில் கடந்த 6 வாரங்களில் இதுவரை 13,234 முகாம்கள் நடைபெற்று அதில் 6,50,585 பேர் பங்கேற்று பயன்பெற்றுள்ளனர். தற்போது பருவமழைக் காலமாக உள்ள காரணத்தினால் தமிழக முதல்வரின் உத்தரவின்படி நாளை (டிச.9) அன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் 3000 இடங்களிலும், அதில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் 1000 சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

மேலும், சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோதாமேடு பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து ஆய்வு செய்ய உள்ளேன். பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டு மழைக்கால நோய்களிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in