Published : 08 Dec 2023 05:41 PM
Last Updated : 08 Dec 2023 05:41 PM

சென்னை வெள்ள பாதிப்பு - ‘சுகாதார அவசர’ நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டியது ஏன்?

பட்டாளம் பகுதியில் மழை வெள்ளத்தில் கலந்த கழிவுநீர்.

சென்னை: வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளன. இந்த நிலையில், இயற்கை பேரிடர்கள் ஏற்படும் நேரங்களில் பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதன் மூலம் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் காலரா உள்ளிட்ட நோய்களை தடுக்க முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திராவை நோக்கி போன பிறகும், அது ஏற்படுத்திய பாதிப்பு சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பதம்பார்த்துவிட்டது. சென்னையில் குறிப்பாக வேளச்சேரி, தாம்பரம், முடிச்சூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, பழைய வண்ணாரப்பேட்டை, திருவெற்றியூர், மணலி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது மிக்ஜாம் புயல். தேங்கி இருக்கும் மழைநீரால் அத்தியாவசிய தேவைகளைகூட நிறைவேற்ற முடியாமல் மக்கள் பல்வேறு இன்னல்களை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.

இதனிடையே, சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வரும் நிலையில், அந்த மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மழைநீருடன், கழிவுநீரும் கலந்திருப்பதால் கிருமிகள் தோன்றி, தொற்று நோய்கள் உருவாகி பரவக்கூடிய ஆபத்து உள்ளது. தேங்கியிருக்கும் அசுத்தமான நீரானது காலரா, டைபாய்டு மற்றும் மலேரியா போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். மழைக்கால தொற்று நோய்களும் பரவ ஆரம்பித்தால், நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும் என சுகாதார அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர், அவசரநிலைக்கு தயாராகுமாறு மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார அதிகாரிகளுக்கு நான்கு பக்க முன்னறிவிப்பை வழங்கியுள்ளார். சென்னையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஆங்காங்கே மருத்துவ பரிசோதனையும் நடைபெற்று வருகிறது. தமிழக அரசும் சுகாதார நடவடிக்கைகளை கவனித்து வருகிறது.

முன்னதாக, “மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 300 நடமாடும் மருத்துவ வாகனங்களில் அனுப்பப்பட்டத்தில் 37,751 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 1,055 நபர்களுக்கு காய்ச்சலும், 4106 நபர்களுக்கு சுவாச தொற்றும், 154 பேருக்கு வயிற்றுப் போக்கும் இருப்பது கண்டறியப்பட்டது” என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் நாளை (டிச.9) 3,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும். அதில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 1,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று அவர் இன்று தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன? - இந்தச் சூழலில், இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு தனது இணையதளத்தில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. அதன் சுருக்கமான விவரம்: “இதுபோன்ற அவசரகால சவால்களுக்கு தயாராக இருப்பது பல மனித உயிர்கள் மற்றும் பொருட் சேதங்களை தடுக்க உதவும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு கிடைப்பதையும், பராமரிப்பு தேவைகளையும் உறுதி செய்ய வேண்டும். நடமாடும் சுகாதார குழுக்களை அமைக்க வேண்டும். தொற்றுநோய் பரவுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதன் மூலம் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் காலரா உள்ளிட்ட நோய்களை தடுக்க முடியும்.

நோயால் பாதிக்கப்பட்டு கடுமையான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை தேவைப்படும். ஆனால், இதுபோன்ற தொற்று நோயால் பாதிக்கப்படும் சில நபர்களுக்கு முதற்கட்ட அறிகுறிகள் தென்படாமலே இருக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு பாதிக்கப்படும் நபர்கள் போதிய பரிசோதனைகளை மேற்கொள்ளாத பட்சத்தில், அவர்கள் வெளியேற்றப்படும் கழிவுகளில் 10 நாட்கள் வரை உயிர் வாழக்கூடிய பாக்டீரியாக்கள் இருக்கும். இது மற்றவர்களுக்கு பரவும் அபாயமும் இருக்கிறது. இதனால் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு போதிய மருத்துவ உதவி கிடைக்கப்படாத நபர்கள் உயிரிழக்கும் அபாயமும் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

எனவே, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுகாதார அவசரநிலையை ஒத்த ஏற்பாடுகளை செய்வதில் அரசு மென்மேலும் தீவிரம் காட்ட வேண்டியது அவசியம்.

- தகவல் உறுதுணை: ஆர்.சுஜாதா

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x