Published : 07 Dec 2023 09:38 PM
Last Updated : 07 Dec 2023 09:38 PM

மிக்ஜாம் பாதிப்பு | நடைபாதை வியாபாரிகளின் சிறப்பு கடனுதவிக்கு நடவடிக்கை: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: “மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு சிறப்பு கடனுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கலந்தாலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தமிழக அரசின் செய்தி குறிப்பு: “மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தங்குதடையின்றி காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் கிடைக்கும் வகையில் கூட்டுறவுத்துறையின் மூலம் சென்னை, தேனாம்பேட்டை காமதேனு கூட்டுறவு சிறப்பங்காடியிலிருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்களை விற்பனை செய்ய செல்லவுள்ள நகரும் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை வாகனத்தினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று (07.12.2023) ஆய்வு செய்து அனுப்பிவைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்: கடந்த 3ஆம் தேதி முதல் மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னையில் பெருமழைபெய்தது. இதுவரை 47 ஆண்டுகள் இல்லாத வகையில் அதிகமாக மழை பெய்துள்ளதை நாம் அறிவோம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக தேங்கியிருக்கக்கூடிய தண்ணீரை அப்புறப்படுத்தப்படும் பணிகள் ஏறத்தாழ 80 சதவீதம் முடிந்துள்ளது. எஞ்சிய இடங்களில் இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர் வடிக்கப்பட்டு சகஜ நிலை திரும்பும்.

அதே நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மீன்பிடி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான பால், காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற பொருட்களை அவர்கள் இருக்கின்ற இடங்களுக்கே கொண்டு சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அதற்காக நேற்றைய தினம் 10 நகரும் பண்ணை பசுமை காய்கறி விற்பனை வாகனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றது. தொடர்ந்து இன்றைய தினம் அதன் எண்ணிக்கை 50 ஆக உயர்த்தப்பட்டு இந்த வாகனங்களில் காய்கறிகள், மளிகைப்பொருட்கள் மற்றும் ஆவின் பால் ஆகியவை எடுத்துச் செல்லப்பட்டு நியாயமான விலையில் விற்பனை செய்யபடுகிறது.

அதேபோல, ஒருசில நியாயவிலைக்கடைகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 17 கடைகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த கடைகள் எல்லாம் சரிசெய்யப்பட்டு, சீராக இயங்குகின்ற நிலைக்கு வந்துளது.பாதிக்கப்பட்ட நியாயவிலைக் கடைகள் தவிர மற்ற நியாயவிலைக்கடைகளில் குடிமைப் பொருட்களான அரசி, சக்கரை போன்ற பொருட்கள் மட்டும் அல்லாமல், தேவைக்கேற்ப, இப்போது எப்படி நகரும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்கள் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுகிறதோ, அதேபோல இடவசதி உள்ள கடைகளில் தேவைப்படும் இடங்களில் காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்கள், ஆவின் பால் விற்பனை செய்ய ஆலோசித்துள்ளோம். அதுவும் நடைமுறைப்படுத்தப்படும்.

எந்தெந்த பகுதிகளில் காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை: வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்ட நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, சின்னமலை, கிண்டி, வேளச்சேரி, ஆதம்பாக்கம், மேடவாக்கம், கோட்டூர்புரம், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுல், நடுக்குப்பம், பெசண்ட் நகர், சாஸ்திரிநகர், தரமணி, சூளமேடு, அரும்பாக்கம், புதுப்பேட்டை, சிந்தாகிரிப்பேட்டை, தி.நகர், பாண்டிபஜார், கே.கே.நகர், விருகம்பாக்கம், அசோக்நகர், ஜபர்கான்பேட்டை, மேற்கு சைதாப்பேட்டை, எழும்பூர், சேத்துப்பட்டு, மைலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, திருவான்மியூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, ஆலந்தூர், மடுவங்கரை, ஈக்காட்டுத்தாங்கல், பட்ரோடு, வடபழனி, சாலிகிராமம், மேற்குமாம்பலம், ரங்கராஜபுரம், தாடண்டர் நகர், ஜோன்ஸ் ரோடு போன்ற பகுதிகளிலும் அதேபோல வட்டம் (Zone) 2,13,14,15,16 ஆகிய பகுதிகளிலும் இந்த நகரும் காய்கறிகள் மற்றும் மளிகைப்பொருட்கள் வாகனம் விற்பனைக்கு செல்கிறது. தேவை ஏற்படின் இந்த வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

மழையினால் சாலையோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு கூட்டுறவுத்துறையின் மூலம் கடன் வழங்க திட்டம் ஏதேனும் இருக்கிறதா? என்ற கேள்விக்கு, “நல்ல யோசனை, ஆனால், இதற்கான திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் உள்ளது. அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக சொல்ல வேண்டுமேயானால் ஏற்கனவே ரூ.214 கோடி கடன் மூலம் 58,000 வியாபாரிகள் பயனடைந்துள்ளார்கள். புதிதாக இப்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அது செல்ல முதலமைச்சருடன் கலந்து பேசி, அவர்களுக்கான சிறப்புதிட்டங்களை அறிவிக்க ஆலோசனையினைப் பெற இருக்கின்றோம்.

17 நியாயவிலைக்கடைகள் முழுமையாக சேதமடைந்திருந்தன. அதில் தற்போது 14 கடைகள் முழுமையாக சரிசெய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தண்ணீரில் பொருட்கள் சேதமடைந்திருந்தாலும், அங்கு வேறு தரமான பொருட்கள் எடுத்துவரப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

காய்கறிகளைப் பொறுத்தவரையில் கிலோ ஒன்றுக்கு, தக்காளி ரூ.30க்கும், வெங்காயம் ரூ.50க்கும், உருளைக்கிழங்கு ரூ.16க்கும், செளசெள ரூ.25க்கும், மிளகாய் ரூ.40க்கும், பீன்ஸ் ரூ.55க்கும், பீர்க்கங்காய் ரூ.50க்கும், பீட்ரூட் ரூ.60க்கும், முட்டைகோஸ் ரூ.20க்கும் விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெளிச்சந்தைகளில் இதன் விலைகள் எல்லாம் கூடுதலாக இருக்கும். அதைப்போல மளிகைப் பொருட்கள் ஒவ்வொரு வாகனங்களிலும், மஞ்சள் ட்க்ஹூள், சர்க்கரை, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, உளுந்தம் பருப்பு, கடுகு, மிளகு, சீரகம், சமையல் எண்ணெய், டீ தூள், புளி, அரசு கல் உப்பு, ராகி மாவு, பொட்டு கடலை, கடை பருப்பு ஆகிய 15 வகை மளிகைபொருட்களும் இந்த வாகனங்களில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x