Published : 07 Dec 2023 08:55 PM
Last Updated : 07 Dec 2023 08:55 PM

ராஜ்நாத் சிங் ஆய்வு முதல் வட சென்னை மக்களின் பரிதவிப்பு வரை - டாப் 10 அப்டேட்ஸ் @ வெள்ள பாதிப்பு

தமிழகத்துக்கு ரூ.450 கோடி நிவாரணம் ஒதுக்கீடு:மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு ரூ.450 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதேபோல் ஆந்திரப் பிரதேசத்துக்கு ரூ.493 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ராஜ்நாத் சிங் ஆய்வு:மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார்.

பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். பின்னர் அரசு அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.

அதைத் தொடர்ந்து அவர் கூறுகையில், “அண்மைக் காலமாக சென்னையில் ஏற்படும் தொடர் வெள்ள பாதிப்புகளை கருத்தில்கொண்டு, சென்னை வடிகால் திட்டத்துக்காக, ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளுக்கு ரூ. 561.29 கோடி மதிப்பிலான நகர்ப்புற வெள்ளத் தணிப்பு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் ரூ. 500 கோடி மத்திய உதவி அடங்கும்” என்றார்.

மிக்ஜாம் நிவாரண நிதி: முதல்வரிடம் மத்திய அமைச்சர் உறுதி:“சாலைகள், பாலங்கள், கட்டடங்கள் ஆகிய பொது கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்வதற்கும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் ஏதுவாக, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5,060 கோடியை வழங்கிடுமாறு பிரதமருக்கு ஏற்கெனவே நான் கோரிக்கை வைத்திருக்கிறேன். அதனை கருத்தில் கொண்டு, முதற்கட்டமாக இன்று 450 கோடி ரூபாயை அளித்தமைக்கு, பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மேலும், “நமது கோரிக்கைகள் குறித்த கோரிக்கை மனு ஒன்றையும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கொடுத்துள்ளேன். இழப்பீடுகளை மதிப்பீடு செய்திட மத்திய அரசின் குழு ஒன்றும் தமிழகத்துக்கு வர உள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலித்து மத்திய அரசு விரைவில் வழங்கிடும் என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். நிவாரணப் பணிகளைத் தொடர்ந்து முழு வீச்சில் மேற்கொண்டு அனைத்துப் பகுதிகளையும் இயல்பு நிலைக்குக் கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்" என்று முதல்வர் கூறினார்.

“வடிகால் பணிகள்... வெள்ளை அறிக்கை வெளியிடுக” - இபிஎஸ்:சென்னையில் மழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதற்கு நிர்வாகத் திறமையற்ற திமுக அரசே பொறுப்பு என்று குற்றம்சாட்டியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ரூ. 4,000 கோடி வடிகால் பணிகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை:புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் மாணவர்கள் நலன் கருதி சென்னை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

புழல் ஏரியின் நிலை என்ன?: புழல் ஏரியின் கரை உடையும் அபாயத்தில் உள்ளதாக வெளியான செய்தியை கொசஸ்தலையாறு வடிநில கோட்டத்தின் செயற்பொறியாளர் மறுத்துள்ளார்.
தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி மட்டப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது என்றும், புழல் ஏரியின் கரை உடையும் நிலையில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

4 நாட்களாக வடியாக வெள்ளத்தில் கழிவுநீர் - மக்கள் அவதி: மிக்ஜாம் புயல் சென்னையை ஒரு வழி ஆக்கிவிட்டு ஆந்திராவில் கரையை கடந்தது. சென்னையில் அதிகனமழை ஓய்ந்து நான்கு நாட்கள் கடந்த பிறகும் தற்போது வரை பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடியவில்லை. மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து கொண்டதால் மக்கள் சிரமத்தை மேற்கொண்டு வருகிறார்கள். பொதுமக்கள் மின்சாரமின்றி, குடிநீர் வசதியின்றி இயற்கை உபாதைகளுக்கு இடமின்றி சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள். பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததன் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த சாமான்கள், தொலைக்காட்சி பெட்டி உள்ளிட்ட பல்வேறு விலை உயர்ந்த பொருட்கள் மழை நீரினால் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக பெரும்பாலான குடும்பங்களுக்கு பலத்த நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் கூடுதல் நிதிச் சுமை, வருவாய் இழப்பு என இரட்டை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

வடசென்னை மக்கள் பரிதவிப்பு: சென்னையின் பல்வேறு பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை, அதிகாரிகள் என யாரும் உதவி செய்யவில்லை என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சென்னை தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என்றாலும், குடிநீர், பால் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு இருப்பதாக தெரிகிறது. வடசென்னை பகுதியில், மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு தமிழக அரசும், சென்னை மாநகராட்சி நிர்வாகமும் உரிய கவனம் செலுத்தவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. உணவு, குடிநீர், மின்சாரம், பால் இல்லாமல் நான்கு நாட்களாக மக்கள் பரிதவித்து வருவதாக குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இன்னும் மழை நீர் வடியாததால் மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர்.

எண்ணூர் பகுதியில் நோய் பரவும் அபாயம்: எண்ணூர் பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ளநீரில் ஏற்கனவே கழிவு நீர் கலந்துள்ளது. இந்த நிலையில், தற்போது கச்சா எண்ணெயும் கலந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பெட்ரோலியம் தொழிற்சாலைகளை மழைநீர் சூழ்ந்திருக்கும் நிலையில், அங்கிருந்து கச்சா எண்ணெய் கசிந்து வருவதால் எண்ணூர் முகத்துவாரம் நிறம் மாறி வேறு நிறத்தில் காட்சி அளிக்கிறது. இதனால், அப்பகுதி மக்களுக்கு நோய் பாதிப்புகளும் வரலாம் என அஞ்சப்படுகிறது.

பால், குடிநீர் விலை உயர்வால் மக்கள் பாதிப்பு: சென்னை கொரட்டூரில் ஆங்காங்கே சில பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வெளியேறாமல் இருப்பதாகவும், அதை பயன்படுத்தி ஒரு குடிநீர் கேன் 120 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் அங்குள்ள மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தண்ணீர், பால் போன்ற அத்தியாவசிய பொருள்களை வாங்க மிகவும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக, தண்ணீர் வழக்கத்தை விட இருமடங்கு வரை அதிகமாக விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதேபோல், மணலியில் ராஜிவ் காந்தி நகர் பகுதியில் மின் இணைப்பு, போதிய உணவு, குடிநீர் வசதி இல்லாமல் குடியிருப்பு வாசிகள் பரிதவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x