Published : 07 Dec 2023 02:01 PM
Last Updated : 07 Dec 2023 02:01 PM

''புழல் ஏரியின் கரை உடையும் நிலையில் இல்லை'' - கோட்ட செயற்பொறியாளர் அறிக்கை

புழல் ஏரி | கோப்புப்படம்

சென்னை: புழல் ஏரியின் கரை உடையும் அபாயத்தில் உள்ளதாக வெளியான செய்தியை கொசஸ்தலையாறு வடிநில கோட்டத்தின் செயற்பொறியாளர் மறுத்துள்ளார்.

''மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் புழல் ஏரியில் மிக கடுமையான அளவில் அலைகள் ஏற்பட்டு கலங்களின் மேல் தண்ணீர் வெளியேறியது. கலங்கள் வழியாக அலைகளால் தண்ணீர் வெளியேறியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி மட்டப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது'' என்று கொசஸ்தலையாறு வடிநில கோட்டத்தின் செயற்பொறியாளர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: ''புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான ஏரியாகும். இந்த ஏரியானது திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் பரப்பு பகுதி 20.27 ச.கி.மீட்டர் ஆகும். இந்த ஏரியின் முழு உயரம் 21.20 அடி ஆகும். இந்த ஏரியின் முழுக் கொள்ளளவு 3300 மி.கன அடியாகும். ஏரியின் கரையின் நீளம் 7090 மீட்டர் ஆகும்.

இன்றைய (டிச.7) காலை 6 மணி நிலவரப்படி 20.00 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் கொள்ளளவு 3012 மி.கன அடியாக உள்ளது. மேலும் இன்று காலை 6 மணி நிலவரப்படி, புழல் ஏரியின் நீர்வரத்தானது 550 கன அடியாக உள்ளது. தற்போது ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கன அடி விதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக மிக்ஜாம் புயலினால் அதிக அளவு கனமழை பெய்ததினால் ஏரிக்கு நீர் வரத்து கூடுதலாக வந்து கொண்டிருந்ததால், ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில் ஏரியில் இருந்து ரெகுலேட்டர் வழியாக உபரி நீர் வினாடிக்கு 5500 கன அடி வெளியேற்றப்பட்டு வந்தது. அப்போது ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் ஏரியில் மிக கடுமையான அளவில் அலைகள் ஏற்பட்டு கலங்களின் மேல் தண்ணீர் வெளியேறியது.

இதனால் காவல் துறை பாதுகாப்பு அறை பின் பகுதியில் கரையில் உள்ள பக்கவாட்டு தாங்கு சுவர் (Parapet Wall)-ன் பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த கருங்கல்லால் ஆன Apron சரிந்து மண் அரிப்பு ஏற்பட்டது. இது ஏரியின் FTL விட 2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் வழியாக தண்ணீர் வெளியேறவில்லை. மேலும் கலங்கள் வழியாக அலைகளால் தண்ணீர் வெளியேறியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி மட்டப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, செய்திதாள் ஒன்றில், கரை உடையும் அபாயத்தில் புழல் ஏரி என்னும் தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x