Published : 07 Dec 2023 04:41 AM
Last Updated : 07 Dec 2023 04:41 AM

புயல் பாதிப்புகளை பார்வையிட இன்று சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

சென்னை: சென்னைக்கு இன்று வரும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து புயல் பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கிறார்.

மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் வரலாறு காணாத மழையை சந்தித்தன. புயல் மற்றும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், 4 மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் அதிகம் இல்லாவிட்டாலும், சாலை உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கான கணக்கெடுப்பு தற்போது மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மழை பாதிப்புகள் குறித்து திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

இந்நிலையில், மத்திய அரசு சார்பில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெள்ள பாதிப்புகளை பார்வையிட இன்று சென்னை வருகிறார். டெல்லியில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் அவர், சென்னை விமான நிலையத்துக்கு பகல் 12.15 மணிக்கு வருகிறார். பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார். அவருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக நிதியமைச்சர் தங்கம்தென்னரசு, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடன் பயணிக்கின்றனர்.

அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து தமிழக அமைச்சர், தலைமைச் செயலர் ஆகியோர் மத்திய அமைச்சருக்கு விளக்குகின்றனர்.

பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட பிறகு, பகல் 1.15 மணிக்கு ஐஎன்எஸ் அடையாறில் இறங்கும் ராஜ்நாத்சிங், அங்கிருந்து கார் மூலம் தலைமைச் செயலகம் செல்கிறார். அங்கு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசுகிறார்.

அதன் பிறகு, புயல் பாதிப்புகள், மாநில அரசின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த தகவல் தொகுப்பு விளக்கப் படத்தை பார்வையிடுகிறார். பிறகு, மதியம் 2 மணிக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு செல்கிறார். அங்கிருந்து 2.40 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x