Published : 10 Jan 2018 03:44 PM
Last Updated : 10 Jan 2018 03:44 PM

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அதிநவீன விபத்து காய சிகிச்சை மையம் தொடக்கம்

TAEI திட்டத்தின் கீழ் 29 படுக்கை வசதியுடன் கூடிய அதி நவீன விபத்து காய சிகிச்சை மையம் சென்னை அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டது.

அதி நவீன விபத்து காய சிகிச்சை மையம் மூலம் உலக தரத்திலான இவ்வசதிகள் மூலம் ஏழை எளிய மக்கள் பெயன் பெறலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்

இன்று சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (RGGH) தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை(TAEI) திட்டத்தின் கீழ் 29 படுக்கை வசதிகளுடன் கூடிய விபத்து காய மற்றும் அவசரகால சிகிச்சை மையத்தினை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:

''ஒவ்வொரு ஆண்டும், சாலை விபத்துகளில் ஏராளமான விலைமதிப்பற்ற மனித உயிரிழப்புகள் ஏற்படுவதால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாவதுடன் குடும்பத்தில் சம்பாதிக்கும் நபரின் இழப்பினால் பொருளாதார நெருக்கடிக்கும் உள்ளாகின்றன.

தமிழக அரசு விபத்துகளைக் குறைக்கவும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கும் பல சீரிய முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இதன் ஓர் அங்கமாக கடந்த சட்டப்பேரவை  கூட்டத்தொடரில் விபத்தினால் ஏற்படும் பாதிப்புகளுக்காக விபத்து சிகிச்சை கொள்கை வகுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டேன்.

இதனைத் தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி அன்று  விபத்து காய சிகிச்சை பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா - இந்தியா விபத்து காய சிகிச்சை திட்டத்தில் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி ஓர் அங்கமாக இருப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் இன்று தொடங்கி வைக்கப்பட்ட விபத்து காய மற்றும் அவசர கால சிகிச்சை மையத்தில் 29 படுக்கைகள் அவசர கால மருத்துவர்கள், சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்தவ உதவியாளர்கள், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட உயிர்காக்கும் உபகரணங்கள் ஆகியவை நிறுவப்பட்டு 24 மணி நேரமும் செயல்படும்.

விபத்தினால் அவசர சிகிச்சை தேவைப்படுபவரை காயத்தின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தி அதிவிரைவாக முன்னுரிமைபடுத்தப்படுவார்கள் (triage). இத்தகைய விபத்து காய அவசர சிகிச்சை மையங்கள் வெளிநாடுகளில் மட்டுமே இதுவரை காண முடிந்தது. ஆனால் தற்போது ஜெயலலிதா அரசின் சீரிய முயற்சியால் உலகத்தரம் வாய்ந்த இத்தகைய அவசர சிகிச்சை மையங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காலதாமதமில்லாத (Zero Delay) வகையில் சிகிச்சை அளிப்பதன் மூலம் மதிப்பு மிக்க மனித உயிர்கள் பாதுகாக்கப்படும்.''

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x