Published : 25 Jan 2018 09:19 AM
Last Updated : 25 Jan 2018 09:19 AM

பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்க வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் உண்ணாவிரதம்

பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்க வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்க வலியுறுத்தி இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடு பிரிவு சார்பில், சென்னையில் நேற்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சம்மேளனத்தின் தலை வர் தி.தமிழரசு இந்த போராட்டத்துக்கு தலைமை வகித்தார்.

இந்தப் போராட்டம் குறித்து பொதுச்செயலாளர் சி.பி. கிருஷ் ணன் கூறியதாவது:

மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து பொதுத்துறை நிதி நிறுவனங்களுக்கு, குறிப்பாக பொதுத்துறை வங்கிகளுக்கு எதிரான தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வரும்போது சுமார் ரூ.2 லட்சம் கோடியாக இருந்த வாராக் கடன், தற்போது ரூ.8 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

பெரு நிறுவனங்களின் வாராக் கடனை வசூல் செய்ய புதுப்புதுச் சட்டங்களும் அவசரச் சட்டங்களும் இயற்றப்பட்டும், பெரு நிறுவனங்களின் வாராக் கடன் வசூல் செய்யப்படவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு பொதுத்துறை வங்கிகளை பலிகடாவாக்க மத்திய அரசாங்கம் முயற்சிக்கிறது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி, உடன் சரி செய்யும் நடவடிக்கை (PCA - Prompt Corrective Action) என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளை செயல்படவிடாமல் மேலும் பலவீனமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதுவரை 10 பொதுத்துறை வங்கிகள் மீது இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகத்தை கட்டாயப்படுத்தி 11 வங்கி ஊழியர், அதிகாரிகள் சங்கங்களுடன் மறுசீரமைப்புத் திட்டம் என்ற ஒரு முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.

வங்கிகளின் உயர்மட்ட நிர்வாகத்துக்கு இத்தகைய நிலைமையை சரி செய்ய எந்தப் பொறுப்பும் இத்திட்டத்தில் நிர்ணயிக்கப்படவில்லை. மாறாக, எந்த நடவடிக்கைகள் பொதுத்துறை வங்கிகளை பலவீனமாக்கும் நிலைமைக்கு இட்டுச் சென்றதோ, அதே நடவடிக்கைகளை தொடர்வதற்கான திட்டமாகத் தான் இது அமைந்துள்ளது.

கிராம வங்கிகளின் பங்குகளில் 49 சதவீதம் வரை தனியாருக்கு தாரை வார்க்கும் சட்டம் இயற்றப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்த மத்திய அரசு துரித நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தப் போராட்டத்தில், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ்நாடு பிரிவின் பொதுச் செயலாளர் துரைப்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x