Last Updated : 01 Dec, 2023 11:46 PM

 

Published : 01 Dec 2023 11:46 PM
Last Updated : 01 Dec 2023 11:46 PM

இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களை இந்தியா- இலங்கை ஒப்பந்தம் அடிப்படையில் இந்திய குடிமகன்களாக அங்கீகரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் இரும்பூதிப்பட்டி அகதிகள் முகாமை சேர்ந்த டி.கணேசன். இவர் உயர் நீதிமன்ற கிளையில் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், மனுதாரர் இந்திய குடியுரிமைக்காக தாக்கல் செய்துள்ள ஆவணங்கள், மனுதாரர் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க போதுமானதாக இல்லை என மத்திய உள்துறை செயலாளர் 11.2.2022-ல் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்து தன்னையும், தனது குடும்பத்தினரையும் இந்திய குடிமகன்களாக அங்கீகரிக்கக்கோரி கணேசன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:

இலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மையினர். தமிழர்கள் சிறுபான்மையினர். அங்கு தமிழர்கள் ஒரே குழுவினராக இல்லை. தமிழர்களில் பெரு்ம்பாலானவர்கள் இலங்கையை பூர்வீகமாக கொண்டனர். அவர்கள் இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ளனர். இலங்கையில் வாழும் தமிழர்களின் குறிப்பிட்ட சதவீதம் பேர் இலங்கையில் உள்ள தேயிலை தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழகத்திலி்ருந்து 19வது நூற்றாண்டில் சென்றவர்கள். இவர்கள் இலங்கை எப்போது சுதந்திரம் பெற்றதோ, அப்போதிலிருந்து நாடற்றவர்களாக மாறிவிட்டனர்.

இலங்கையில் வாழும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களின் நலன் தொடர்பாக இந்தியா, இலங்கை இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. 1964-ல் போடப்பட்ட முதல் ஒப்பந்தத்தில், இலங்கையிலிருந்து 5.25 லட்சம் தமிழர்களை இந்தியாவுக்கு திரும்ப அனுப்பி, அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்றும், 1974-ல் ஏற்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தில் 1.50 லட்சம் பேரில் 50 சதவீதம் பேருக்கு இலங்கை குடியுரிமை வழங்குவது, 75 ஆயிரம் பேரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்பி, இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மனுதாரர் 16 வயதில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளார். அவருக்கு 1982-ல் தான் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அதில் மனுதாரரின் சிறுவயது புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் மற்றும் விபரங்களை பாஸ்போர்ட் அதிகாரி சான்றொப்பம் அளித்துள்ளார்.

இந்திய அரசு மனுதாரின் பாஸ்போர்ட் மற்றும் அதிலுள்ள விபரங்கள் குறித்து கேள்வி எழுப்பவில்லை. அதில் உள்ள புகைப்படம் தான் தற்போது பிரச்சினையாக உள்ளது. சிறு வயது புகைப்படத்தை வைத்து ஒருவரை அடையாளம் காணும் யுகத்தில் இருக்கிறோம். பாஸ்போர்ட்டின் உண்மை தன்மையில் சந்தேகம் இல்லாத போது, அதிலுள்ள புகைப்படத்தை உரிமை கோருபவருடன் பொருத்தி சரிபார்ப்பதை அதிகாரிகள் தான் செய்ய வேண்டும். அந்த சுமையை மனுதாரர் மீது திணிக்கக்கூடாது.

இலங்கையிலிருந்து தாயகம் திரும்பும் 6 லட்சம் பேருக்கு இந்திய குடியுரிமை வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதுவரை 4,61,639 பேரின் இந்திய குடியுரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.10.1981 ஆகும். மனுதாரர் 1970-ல் விண்ணப்பித்துள்ளார். 33 வயதில் இந்தியா வந்த மனுதாரர் தற்போது பேரன், பேத்திகளுடன் உள்ளார்.

இலங்கையில் இருந்து தாயகம் திரும்புவோருக்கு இந்திய குடியுரிமை வழங்குவது தொடர்பான கணக்கீடு 1974ல் எடுக்கப்பட்டுள்ளது. கணக்கீடு எடுக்கப்பட்டு அரை நூற்றாண்டு காலம் கடந்து விட்டது. இன்னும் 1.37 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். தற்போது இந்திய குடியுரிமை கேட்டு 5130 பேர் விண்ப்பித்துள்ளனர்.

மனுதாரரின் இந்திய குடியுரிமையை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடவில்லை. இலங்கை- இந்தியா ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருப்பதை நிறைவேற்ற வேண்டும் என்று தான் கூறுகிறோம். எனவே மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர், அவரது குடும்பத்தினரை இந்திய குடிமகன்களாக அங்கீகரிக்க வேண்டும். மனுதாரருக்கு இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்கான மறுவாழ்வு உதவிகளை மாநில அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x