Published : 27 Nov 2023 03:35 PM
Last Updated : 27 Nov 2023 03:35 PM

வேலூர் 50-வது வார்டில் ஜல்லி கற்கள் கொட்டிவிட்டு சாலை அமைக்க ‘மறந்த’ நிர்வாகத்தால் மக்கள் அவதி

வேலூர்: வேலூர் மாநகராட்சி 50-வது வார்டில் தார்ச்சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொட்டி பல மாதங்கள் ஆகியும் சாலை அமைக்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. தற்போது, மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் ஜல்லி கற்கள் கொட்டிய சாலை குண்டும், குழியுமாக மாறியிருப்பதால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலான மழைபெய்து வருகிறது. மழைக்காலம் தொடங்கிய நிலையில் வேலூர் மாநகராட்சியின் பல சாலைகளில் பொதுமக்கள் பயணிக்க முடியாத அளவுக்கு மீண்டும் சேறும், சகதியுமாக மாறிவிட்டன.

மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் மக்களுக்கு பயந்து ஓடி ஒளியும் கவுன்சிலர்கள், அதிகாரம் இல்லாத நான்கு மண்டலங்கள், கேள்வி கேட்க முடியாத இடத்தில் மேயர், பாதாள சாக்கடை திட்டம், சாலை அமைக்கும் திட்டம், காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட இணைப்பை செய்ய முடியாமல் திணறி வரும் ஒப்பந்ததாரர்கள், ஒட்டுமொத்த மாநகராட்சியை கட்டுப்படுத்தும் முக்கிய அரசியல் புள்ளி என அடுக்கடுக்கான காரணங்களால் பொதுமக்கள் மத்தியில் வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தின் மீது பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.

இதற்கு மற்றுமொரு சாட்சியாக மாநகராட்சி 50-வது வார்டு மாறியுள்ளது. மொத்தம் 75 தெருக்கள், வாக்காளர்கள் மட்டும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இருக்கும் இந்த வார்டில் உள்ள தெருக்களில் மக்கள் நிம்மதியாக செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த வார்டின் ராஜீவ்காந்தி நகர், அண்ணா நகருக்குச் செல்லும் பிரதான சாலையாக இருக்கும் லட்சுமண முதலி தெரு உள்ளது. இந்த தெருவில் சாலை அமைக்க இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜல்லி கற்கள் கொட்டிய நிலையில் இதுவரை சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஜல்லி கற்கள் கொட்டியும் குண்டும், குழியுமாக உள்ளது.

தெருவில் நேராக வாகனத்தை ஓட்ட முடியாது. வளைந்து, நெளிந்துதான் வாகனங்களை ஓட்ட முடியும் என்ற அளவுக்கு உள்ளது. இந்த தெருத்தான் இப்படி இருக்கிறது என்றால், ராஜீவ்காந்தி நகரில் உள்ள 9 தெருக்களில் தார்ச்சாலை அமைக்க ஜல்லி கற்கள் கொட்டி 11 மாதங்கள் ஆகியும் சாலை அமைக்கவில்லை என பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். பொது வாகவே, வேலூர் மாநகராட்சியில் உள்ள பல வார்டுகளில் திமுக கவுன்சிலர்களாகவே இருந்தாலும் பாகுபாடு பார்க்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதில், அதிமுக வார்டாக இருந்தால் சொல்லவே வேண்டியதில்லை என்ற நிலை உள்ளது.

இதுகுறித்து, 50-வது வார்டு அதிமுக கவுன்சிலர் அருணா விஜயகுமார் தரப்பில் விசாரித்தபோது, ‘‘எங்கள் வார்டில் 15 தெருக்களுக்கு சாலை அமைக்க வேண்டியுள்ளது. இதில், 9 தெருக்களில் சாலை அமைக்க கடந்த பொங்கல் பண்டிகை நேரத்தில் ஜல்லி கற்கள் கொட்டினார்கள். இதோ..... இன்னும் ஒரு மாதத்தில் அடுத்த பொங்கல் பண்டிகை வரப்போகிறது. மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. அதிகாரிகள் அளிக்கும் பதிலும் திருப்தியாக இல்லை. சாலை அமைக்க மாதங்கள் ஆகும் என்றால் எதற்காக ஜல்லி கற்கள் கொட்டுகிறார்கள் என தெரியவில்லை’’ என்றனர்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘தார்ச்சாலை அமைக்க அடுத்த ஆண்டு நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். பல வார்டுகளில் ஜல்லி கற்கள் கொட்டிய நிறைய சாலைகள் உள்ளன. அவற்றில் முன்னுரிமை அடிப்படையில் தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தனர். மொத்தம் 75 தெருக்கள், வாக்காளர்கள் மட்டும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இருக்கும் இந்த வார்டில் உள்ள தெருக்களில் மக்கள் நிம்மதியாக செல்ல முடியாத நிலை உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x