Published : 27 Nov 2023 02:27 PM
Last Updated : 27 Nov 2023 02:27 PM

“நான் சிலரை மனிதர்களாக மதிப்பதில்லை. காரணம்...” - சீனு ராமசாமி விவகாரத்தில் மனிஷா யாதவ் விளக்கம்

சென்னை: ‘இடம் பொருள் ஏவல்’ படப்பிடிப்பின்போது இயக்குநர் சீனு ராமசாமி உடனான பிரச்சினை தொடர்பாக தற்போது எழுந்துள்ள சர்ச்சை குறித்து நடிகை மனிஷா யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் சீனு ராமசாமி - நடிகை மனிஷா யாதவ் இடையிலான பிரச்சினை குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறந்தன. ’இடம் பொருள் ஏவல்’ படத்தின்போது மனிஷா யாதவை இயக்குநர் சீனு ராமசாமி துன்புறுத்தியதாக கூறப்பட்டது. இதுகுறித்து சீனு ராமசாமி தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்த நிலையில், தற்போது நடிகை மனிஷா யாதவ் இதுகுறித்து பேசியுள்ளார்.

பேட்டி ஒன்றில் மனிஷா யாதவ் கூறும்போது, “கடந்த வாரம் சீனு ராமசாமியின் ஆபீசில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. ஒரு புதிய படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருப்பதாக சொல்லப்பட்டது. எனக்கு அது மிகவும் விநோதமாக இருந்தது. இத்தனை ஆண்டுகளாக இருவரும் தொடர்பில் இல்லாத நிலையில், ஏன் அவர் எனக்கு போன் செய்ய வேண்டும் என்று எனக்கு தோன்றியது. ’இடம் பொருள் ஏவல்’ படப்பிடிப்பின்போது அவர் என்னை நடத்திய விதத்தின் அடிப்படையிலும், அவர் என்னை அப்படத்தில் இருந்து நீக்கியதாலும் இனி அவருடைய படத்தில் நடிக்க விரும்பவில்லை. இது எல்லாவற்றுக்கும் காரணம் நான் அவரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளவில்லை என்பதும், அவர் செய்த எல்லாவற்றுக்கும் ஒத்துழைக்கவில்லை என்பதும்தான்.

அப்படத்திலிருந்து நீக்கப்பட்ட பிறகு, உடனடியாக எனக்கு பதில் வேறொரு நடிகை அதில் நடிக்கவைக்கப்பட்டார். அனைத்தும் திடீரென நடந்தது. நான் அந்தக் கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவர் இல்லை என்று ஓர் இயக்குநர் நினைத்து என்னை நீக்கினால் அதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், ஒருவர் எனக்கு எல்லா விதமான குப்பைகளை மெசேஜ் செய்வதை நான் அனுமதிக்கவில்லை. அது என்னை அப்செட் செய்ததால் அது குறித்து நான் யாரிடமும் பேசகூட விரும்பவில்லை. எனக்கு நடிப்பு வரவில்லை என்று அவர் துறையில் இருக்கும் அனைவரிடமும் கூறிவிட்டார் என்று நினைக்கிறேன்.

’ஒரு குப்பை கதை’ பட விழா மேடையில் நான் அனைவருக்குமே நன்றி சொன்னதால் அவருக்கும் சேர்த்து நன்றி சொன்னேன். மேடையில் இருக்கும் ஒருவரை விட்டுவிட்டு அடுத்தவருக்கு நன்றி சொல்வது தொழில் தர்மம் அல்ல. நல்ல மனம் கொண்ட பெரிய இயக்குநர்களிடம் நான் பணியாற்றியிருக்கிறேன். திறமையானவர்களாக இருந்தும் தார்மிக உணர்வு இல்லாதவர்களை நான் மனிதர்களாகவே மதிப்பதில்லை. எனது கணவர், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இந்தத் துறையில் இருக்கும் எனது நலம் விரும்பிகள் ஆகியோரது ஆதரவு எனக்கு இருப்பதால் நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். எந்த ஒரு பெண்ணும், இதுபோன்ற சூழலை மீண்டும் எதிர்கொள்ளமாட்டார் என்று நான் நம்புகிறேன்” என்று மனிஷா யாதவ் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x