Last Updated : 26 Nov, 2023 04:10 AM

 

Published : 26 Nov 2023 04:10 AM
Last Updated : 26 Nov 2023 04:10 AM

பழவேற்காடு - காட்டுப்பள்ளி இடையே போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

திருவள்ளூர்: கிழக்கு கடற்கரை சாலையில் பழவேற்காடு முதல் காட்டுப்பள்ளி வரை போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ள 12 கி.மீ. தூர சாலையை புதிதாக அமைக்க மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பழவேற்காடு – லைட்அவுஸ் குப்பம் முதல், சென்னை – எண்ணூர் வரை கிழக்கு கடற்கரை சாலை அமைந்துள்ளது. சுமார் 26 கி.மீ. தூரம் உள்ள இச்சாலையில் லைட்அவுஸ் குப்பம் முதல் காட்டுப்பள்ளி வரை 12 கி.மீ. தூர சாலை, பழவேற்காடு, லைட் அவுஸ் குப்பம், கோட்டைக்குப்பம், தாங்கல் பெரும்புலம், காட்டுப்பள்ளி ஆகிய 5 ஊராட்சி பகுதிகள் வழியாகச் செல்கிறது.

இந்த 5 ஊராட்சிகளுக்கு உட்பட்ட அரங்கன்குப்பம், கரிமணல், ஆண்டிகுப்பம், ஜமீலாபாத், எடையன்குப்பம், கோரைக்குப்பம், கருங்காலி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் வசிக்கும் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் இந்த சாலையை பயன்படுத்து கின்றனர். மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவும், பழவேற்காடு, பொன்னேரி, மீஞ்சூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லவும் இந்த சாலை பிரதானமாக விளங்குகிறது.

மேலும், காட்டுப்பள்ளி, அத்திப்பட்டு புதுநகர், வல்லூர், சென்னை–எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் தனியார் துறைமுகம், வட சென்னை மற்றும் வல்லூர் அனல் மின் நிலையங்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் சமையல் எரிவாயு நிரப்பும் மையம், தனியார் சிமென்ட் தொழிற்சாலை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்து வசதி இல்லாததால், மோட்டார் சைக்கிள்கள், ஷேர் ஆட்டோக்களில் மட்டுமே மீனவ மக்கள், தொழிலாளர்கள், பழவேற்காடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். பழவேற்காடு – லைட் அவுஸ் குப்பம் முதல் காட்டுப்பள்ளி வரையான 12 கி.மீ., சாலை அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாகிவிட்டன. இதனால், அவை குண்டும், குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறிவிட்டன. இதனால், மீனவ மக்கள், தொழிலாளர்கள் பல்வேறு இன்னலுக் குள்ளாகி வருவதாக கூறுகின்றனர்.

துரை.மகேந்திரன்

இது குறித்து, சாட்டாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த வரும், தமிழ்நாடு மீனவர் சங்கத்தின் மாநில தலைவருமான துரை.மகேந்திரன் கூறியதாவது: லைட் அவுஸ் குப்பம் முதல் எண்ணூர் வரையான கிழக்கு கடற்கரை சாலையை, பழவேற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், பழவேற்காடுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.

லைட் அவுஸ்குப்பம் முதல் காட்டுப்பள்ளி வரையான 12 கி.மீ., சாலை 2017-ல் பிரதமர் சாலை திட்டத்தில் அமைக்கப்பட்டது. ஆனால், 6 மாதங்களில் அந்த சாலை சேதமடைந்தது. பிறகு, பல ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படவில்லை. இந்நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையிடம் இருந்த இந்த 12 கி.மீ. சாலை நெடுஞ்சாலைத் துறையிடம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், ஒப்படைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளாகியும் புதிதாக சாலை அமைக்கப்படவில்லை’’ என்றார்.

நரேந்திரன்

கருங்காலி மீனவ கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான நரேந்திரன் கூறும்போது, ’’லைட்அவுஸ் குப்பம் – காட்டுப்பள்ளி சாலை மிக மோசமாக சேதமடைந்துள்ளது. இதனால், தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவ மழையால், சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதில், சாலை எது, பள்ளம் எது என தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.

மோசமான இந்த சாலையால், சிகிச்சைக்கு செல்லும் கர்ப்பிணிகள், விபத்தில் சிக்குவோர், முதியோர், விரைந்து மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும்,மீனவர்கள், தொழிலாளர்கள் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பணியிடங்களுக்காக, பழவேற்காடு மற்றும் காட்டுப்பள்ளி பகுதிகளில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரம் உள்ள பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் பகுதிகளுக்கு, 40 கி.மீ. தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இனியும் காலம் தாழ்த்தாமல், அரசு உரிய நடவடிக்கை எடுத்து, லைட் அவுஸ்குப்பம் முதல், காட்டுப்பள்ளி வரை புதியசாலை அமைக்கவேண்டும். தொடர்ந்து, இச்சாலையில் அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.

இது குறித்து, நெடுஞ்சாலைத் துறையின் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் பிரிவு அதிகாரி ஒருவர் கூறும்போது,“லைட் அவுஸ் குப்பம் –காட்டுப்பள்ளி வரை புதிய சாலைக்கான கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அந்தகள ஆய்வுக்கு அனுமதி கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்த உடன் கள ஆய்வு மேற்கொண்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். தொடர்ந்து, அந்த திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு அரசின் ஒப்புதல் பெற்று சாலை அமைக்கும் பணி தொடங்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x