Published : 28 Jan 2018 08:20 AM
Last Updated : 28 Jan 2018 08:20 AM

மாணவர்களால்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்: ‘நோட்டா’வை தவிர்க்க வேண்டும் - நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள்

மாணவர்களால்தான் மாற்றத்தை கொண்டுவர முடியும் என நடிகர் கமல்ஹாசன் கூறினார். ஓட்டு போடும்போது ‘நோட்டா’ பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் ‘மாற்றம்’ என்ற தொண்டு நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார். அப்போது மாணவர்களிடம் அவர் பேசியதாவது:

மாணவர்கள் எல்லாம் ஒதுங்கி இருப்பதால்தான் இந்த நிலைக்கு நாம் ஆளாகி இருக்கிறோம். நீங்கள் ஒதுங்கி இருக்கக் கூடாது. இப்படி ஆகி விட்டோமே என கவலைப்பட்டு பிரயோஜனமில்லை. நாடு கெட்டுப் போச்சு, படிப்பு கெட்டுப் போச்சு, ரோடு கெட்டுப் போச்சு, கல்வி கெட்டுப் போச்சு என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதாது. அதற்கு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த மாற்றத்தை எங்கிருந்து செய்ய வேண்டும், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் யோசிக்க வேண்டும். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

நாம் நமது நாட்டை பாதுகாக்கவில்லையென்றால், நம் வாழ்க்கை சரியாக இருக்காது. அரசியலுக்கு நீங்கள் வரவேண்டும். என்னுடன் வரணும்னுகூட கேட்கல. தயவுசெய்து அரசியலுக்கு வாங்க, வந்து உங்களோட சக்தியைக் காட்டுங்க. மாற்றம் தானாகவே வரும். நீங்கள் எதையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அரசியல் களத்தில் நீங்கள் ஆட்டக்காரராக இருக்க வேண்டும். மாற்றத்தை உங்களால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால், இத்தனை மணல்களில் இந்த கருத்தை விதைக்கிறேன்.

இன்று முதல் நீங்கள் நாட்டு நடப்பு என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். யார் கொள்ளையர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள் அது உங்கள் கடமை. எதனால் உங்கள் வீட்டில் தண்ணீர் வரவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஏன் கல்வி நிலை இன்னமும் உயரவில்லை. உங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு எல்லா குழந்தைகளுக்கும் கிடைத்ததா என்று பாருங்கள். ஏன் கிடைக்கவில்லை என்று கோபப்படுங்கள்.

தரமான கல்வி, குடிநீர் வசதி செய்து தருவதே அரசின் கடமை. இதையெல்லாம் ஏற்பாடு செய்ய வேண்டிய அரசு, மது விற்றுக் கொண்டிருக்கிறது. அது வியாபாரம். அதை எந்த வியாபாரியும் எந்தத் திருடனும் செய்யலாம். எல்லாருக்கும் கோபம் வரவேண்டும். மாணவர்கள் தங்கள் ஓட்டுகளை நோட்டாவுக்கு போடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு கமல் பேசினார். தொடர்ந்து மாணவ, மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாற்றம் பவுண்டேஷன் நிறுவனர் சுஜித்குமார், சாய்ராம் கல்விக் குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x