Published : 22 Nov 2023 05:32 PM
Last Updated : 22 Nov 2023 05:32 PM

மதுரையில் வைகை ஆறு ஸ்மார்ட் சிட்டி சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு - பாதியில் நிற்கும் நடவடிக்கை

அகற்றப்படும் ஆக்கிரமிப்புக் கடைகள்.

மதுரை: வைகை ஆறு ஸ்மார்ட் சிட்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற மாநகராட்சி அதிகாரிகளை ஆக்கிரமிப்பாளர்கள் விரட்டியடித்ததால் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனிடையே, அதிகாரிகளை விரட்டிய ஆக்கிரமிப்பாளர்கள் மீது போலீஸில் புகார் செய்ய மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வட மற்றும் தென்கரை மக்கள் தடையின்றி இரு நகரப் பகுதிகளுக்கும் வந்து செல்லும் வகையில் வைகை ஆற்றின் இரு கரைகளில் 'ஸ்மார்ட் சிட்டி' சாலை அமைக்கப்பட்டது. மாநகராட்சி சார்பில் ரூ.81.41 கோடியும், நெடுஞ்சாலைத் துறை ரூ.300 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்து இணைந்து வைகை ஆற்றின் இரு கரைகளிலும் ஸ்மார்ட் சிட்டி சாலை அமைக்கப்பட்டது. இதில், நகருக்கு வெளியில் புறநகரில் நெடுஞ்சாலைத் துறை அமைத்த சாலை சிறப்பாகவும், தரமாகவும் முழுமையாக போடப்பட்டுள்ளது.

ஆனால், மாநகராட்சி சார்பில் போடப்பட்டுள்ள சாலை, தரமற்றதாகவும், முழுமை இன்றியும் உள்ளது. இதனால், இந்த சாலையை வாகன ஓட்டிகள் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக, நகரப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் எந்த வகையிலும் குறையவில்லை. இந்நிலையில் நகரப்பகுதியில் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் முழுமையாக போடப்படாத இந்த சாலைகளில் வாகனப் போக்குவரத்து குறைந்ததால் தனியார் ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன.

தனியார் வாகனங்கள் பார்க்கிங் செய்யப்பட்டதோடு சாலையோர கடைகள், தங்கள் பொருட்களை இந்த சாலையிலே போட்டு வியாபாரம் செய்தனர். மீன்கடைகள் ஆக்கிரமிப்பும் அதிகரித்தன. மாட்டுத் தொழுவங்கள் சாலையில் இருந்தன. இதனால், ஸ்மார்ட் சிட்டி சாலை சுமாரான சாலையாக கூட இல்லாமல் மக்கள் இந்த சாலையில் வரவே தயங்கினர். இன்று இந்த சாலையில் தென் கரையில் ஒபுளாப்படித்துறை சந்திப்பு முதல் குருவிக்காரன் சாலை சந்திப்பு வரை இருந்த தனியார் ஆக்கிரமிப்புகளை போலீஸாருடன் சென்ற நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினர் அகற்றினர்.

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த 25 கடைகளின் பழைய மரக்கட்டைகள், கதவு, ஜன்னல்கள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் 8 டிராக்டர்கள் கொண்டு மாநகராட்சியின் ஆக்கிரமிப்பு பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு எடுத்து செல்லப்பட்டன. கடைகளின் முன்புறம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள படிகள், சிமெண்ட் சிலாப்புகள், மேற்கூரைகள் மாநகராட்சி ஆக்கிரமிப்புப் பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன.

இதற்கு அப்பகுதி ஆக்கிரமிப்பாளர்கள், மாநகராட்சி நடவடிக்கைக்கு கடும் எதிர்த்து அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது சிலர், நகரமைப்பு பிரிவு செயற்பொறியாளர் (திட்டம்) மாலதியை தகாத வார்த்தையால் திட்டினர். பாதுகாப்பிற்கு 3 போலீஸார் மட்டுமே சென்றததால் ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் தடுத்தனர். அதனால், அதற்கு மேல் மாநகராட்சி அதிகாரிகளால் ஆக்கிரமிப்பாளர்களை மீறி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை. மாநகராட்சி கேட்டுக் கொண்டும் கூடுதல் போலீஸாரை மாநகர காவல்துறை அனுப்பி வைக்காததால் ஆக்கிரமிப்பாளர்கள், மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகளை விரட்டியடித்தனர்.

ஆக்கிரமிப்பாளர்கள் தகாத வார்த்தையால் பேசியதால் அதிருப்தியடைந்த நகரமைப்பு அதிகாரி மாலதி, மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலனிடம் புகார் செய்தார். அவர், அப்பகுதி மண்டல உதவி ஆணையாளர் மூலம், தகாத வார்த்தையால் பேசிய ஆக்கிரமிப்பாளர்கள் மீது போலீஸில் புகார் செய்ய உத்தரவிட்டார். மேலும், அடுத்தடுத்த நாட்களில் கூடுதல் போலீஸார், வருவாய்துறை அதிகாரிகளுடன் வைகை ஆறு ஸ்மார்ட் சிட்டி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன் உத்தரவிட்டுள்ளார். இந்த ஸ்மார்ட் சிட்டி சாலையை முழுமையாக போட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றும்பட்சத்தில் மாநகரின் 50 சதவீதம் போக்குவரத்தை குறைக்கலாம் என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x