Last Updated : 22 Nov, 2023 04:48 PM

 

Published : 22 Nov 2023 04:48 PM
Last Updated : 22 Nov 2023 04:48 PM

''தொல்லியலில் அதிக ஆர்வம் கொண்டவர் கருணாநிதி'' - அமைச்சர் தங்கம் தென்னரசு புகழாரம்

மதுரை: தமிழ் இலக்கியம் மட்டுமின்றி தொல்லியல் பரப்பிலும் அதிக ஆர்வம் கொண்டவர் கருணாநிதி என, காமராசர் பல்கலையில் நடந்த தொல்லியல் கருத்தரங்கு தொடக்க விழாவில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு புகழாரம் சூட்டியுள்ளார்.

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, மதுரை காமராசர் பல்கலையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில், 2 நாள் தேசிய கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. இதில் ஆட்சியர் சங்கீதா தலைமை வகித்தார். மேலும், நிகழ்ச்சியில் துணை வேந்தர் ஜெ.குமார் வாழ்த்தி பேசினார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது: "கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, நடக்கும் இக்கருத்தரங்கில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. தலைவர் கருணாநிதிக்கு தொல்லியல் மீது அதிக ஆர்வம் உண்டு. அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், இல்லாத போதும் பல்வேறு உரையாடல்களில் தமிழ் இலக்கியத்தில் கொண்டிருந்த ஆர்வத்திற்கு இணையாக தொல்லியல் பரப்பிலும் ஆர்வமாக இருந்தவர். இது பற்றி தனிப்பட்ட முறையில் நான் நன்றாக உணர்ந்து இருக்கிறேன்.

ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது தொல்லியல் கல்வெட்டு, தமிழர் பாரம்பரியம் குறித்து பல ஆய்வுகளை நடத்திக் காட்டியவர் கருணாநிதி. கடலுக்கு அடியில் தொல்லியல் ஆய்வுகளை நடத்த 50 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டார். 1970-ல் காவிரிப் பூம்பட்டினம் கடலில் மூழ்கியது குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள முன்னெடுத்தவர். தஞ்சையில் மிகப்பெரிய தொல்லியல் கண்காட்சியை நடத்தியபோது, ராஜேந்திர சோழரின் ஆட்சி காலத்தைச் சேர்ந்த கல்லால் ஆன நாதசுரம் பற்றி அவரிடம் நான் விளக்கினேன். எல்லா தகவலையும் உள் வாங்கிய கருணாநிதி, அந்த நாதசுரத்தை வாசிக்க கேட்டு மகிழ்ந்தவன் நான் என, தெரிவித்து ஆச்சரியப்படுத்தினார்.

இது போன்ற பல்வேறு தொல்லியல் தொடர்புகளை அவருடன் பொருத்தி பார்க்கலாம். தொல்லியல் பற்றி அவரிடம் எதை சொன்னாலும், ஒரு மடங்கு கூடுதல் தகவல்களை சொல்வார். எந்த தளத்திலும் தன்னை ஈடுபாடுடன் இணைத்துக் கொண்டவர். வரலாறு என்பது வடக்கில் இல்லை. தமிழகத்துக்கென தனிப்பட்ட வரலாறு உள்ளது. இதற்கான தொல்லியல் கூறுகளை காணலாம். குறிப்பாக அனைத்து போரிலும் பாண்டிய நாடு சிறப்புகளை பெற்றுள்ளது. இதற்கான தொல்லியல் ஆதாரம் அதிகம் கிடைத்துள்ளதால் இக் கருத்தரங்கு மதுரையில் நடப்பது சிறப்பு. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினும் அகழாய்வுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அகழாய்வு நடக்கிறது. இதற்கென ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். தொல்லியல் துறையில் சிறந்த ஆய்வாளர்களான அமர்நாத் ராமகிருஷ்ணன், ராஜ வேலு, ஸ்ரீதரன், வேதாச்சலம், சத்தியமூர்த்தி போன்றோர் இங்கு பங்கேற்றிருக்கின்றனர். இவர்களின் பங்களிப்பு தமிழ் சமூகத்திற்கு அதிகம் என்றாலும், இன்னும் தேவை. ஆய்வாளர்கள், பேராசியர்கள் உதவியுடன் தொல்லியல் ஆய்வுகள் தொடர்ந்து நடக்கும். எந்த ஆய்வாக இருந்தாலும், அறிவியல் ரீதியில் இருக்க வேண்டும். அதை உலகம் ஏற்க வேண்டும். இங்கு வெளியிட்ட புத்தகங்கள், கட்டுரைகளை மாணவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்." இவ்வாறு அமைச்சர் கூறினார்.

முன்னதாக தொல்லியல் குறித்த புத்தகங்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி வெளியிட்டனர். மாநகராட்சி மேயர் இந்திராணி, எம்எல்ஏக்கள் கோ.தளபதி, பூமிநாதன், திமுக மாவட்ட செயலர் மணிமாறன் மற்றும் பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன், தொல்லியல் துறை பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x