Published : 21 Nov 2023 09:00 PM
Last Updated : 21 Nov 2023 09:00 PM

தனியார் நிறுவனம் மூலம் ஓட்டுநர், நடத்துனர் நியமனம் - டெண்டரை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை நியமிப்பது அபாயகரமான சோதனை எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இது சம்பந்தமான டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை நியமிப்பது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன் விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரம் குறித்து தொழிலாளர் நலத் துறை ஆய்வுக்கு எடுத்து, தற்போதைய நிலையே நீடிக்க அறிவுறுத்தியுள்ள நிலையில், மாநகர போக்குவரத்துக் கழகம் இந்த டெண்டரை கோரியிருக்க கூடாது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தொழிலாளர் நலத் துறை ஆணையரின் அறிவுறுத்தலுக்கு எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லை எனவும், பல ஊழியர்கள் தொடர்ந்து பணிக்கு வராததால் ஏற்பட்ட ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இதனால் நிரந்தர ஊழியர்கள் அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதும் தடுக்கப்படும் எனவும் அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாநகர போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துனர்களை நியமிப்பது ஊதிய முரண்பாடுக்கு வழிவகுக்கும் எனவும், இது அபாயகரமான சோதனை எனவும் தெரிவித்து, டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர், நடத்துனர்கள் நியமிக்கப்பட்டால் இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்படாது எனவும், தனியார் நிறுவனங்கள் மூலம் நியமிக்கப்படும் ஓட்டுனர்களால் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவதில் சிக்கல்கள் எழும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேலும், மாநகர போக்குவரத்து கழகம் மட்டுமல்லாமல், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகத்திலும் காலியாக உள்ள ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்ப வல்லுனர்கள் காலிப் பணியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்ப வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x