Published : 21 Nov 2023 05:27 PM
Last Updated : 21 Nov 2023 05:27 PM

''பேரியம் நைட்ரேட் கொண்டு பட்டாசு தயாரிக்க அனுமதிக்க வேண்டும்'' - மத்திய நிதியமைச்சரிடம் பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

விருதுநகர் வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கணேசன் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ராஜா சந்திரசேகர் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். அருகில் பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன்.

சிவகாசி: 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பட்டாசு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கம் (டான்பமா) தலைவர் கணேசன் அளித்த மனுவில், "பட்டாசுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைத்ததற்காகவும், சட்ட விரோத பட்டாசு இறக்குமதியை தடை செய்ய நடவடிக்கை எடுத்ததற்காகவும் நன்றி. கடந்த செப்டம்பர் 22-ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், பேரியம் நைட்ரேட்டைப் பயன்படுத்தி இணைப்பு பட்டாசுகளை(சரவெடி) தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது பட்டாசு ஆலைகளில் 40 சதவீத பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்யும் நிலை உள்ளது. இதனால் பட்டாசு தொழிலை நம்பி உள்ள பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பின்தங்கிய 112 மாவட்டங்களில் ஒன்றாக விருதுநகர் உள்ளது. மாவட்டத்தின் பிரதான பட்டாசு தொழில் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. பேரியம் நைட்ரேட் மட்டுமே பச்சை நிறத்தை உருவாக்குகிறது. இன்று வரை பேரியம் நைட்ரேட்டுக்கு வேறு மாற்று இல்லை. உலகில் வேறு எந்த நாடும் பட்டாசு உற்பத்தியில் பேரியம் நைட்ரேட் பயன்பாட்டை தடை செய்யவில்லை. வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமான பத்திரத்தில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தாமல் 50 முதல் 60 சதவீத பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியாது என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் பட்டாசு உற்பத்திக்கு எதிராக மனு செய்தவரின் தவறான விண்ணப்பங்கள் மூலம், உச்சநீதிமன்றம் பேரியம் நைட்ரேட், விஷ வாயுக்களை வெளியிடுவதாகக் கூறி, அவற்றைக் கொண்டு பட்டாசு உற்பத்தி செய்வதற்கு தடை விதித்துள்ளது.

பட்டாசு குழாயின் அளவை குறைத்து, குறைந்த அளவிலான வேதிப்பொருளை பயன்படுத்தி, சிஎஸ்ஐஆர் - நீரி வழிகாட்டுதலில் தயாரிக்கப்பட்ட இணைப்பு பட்டாசுகளில், புகை வெளியீடு 30 சதவீதம் வரை குறைவாக உள்ளது கண்டறியப்பட்டது. புதிய ஃபார்முலா படி பின்னப்பட்ட இணைப்பு பட்டாசுகளில் ஒலி அளவு 125 டெசிபலுக்கும் குறைவாக உள்ளது என்பது சிஎஸ்ஐஆர் - நீரி நடத்திய சோதனையில் உறுதியாகி உள்ளது. இதுகுறித்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிஎஸ்ஐஆர்- நீரி சார்பில் குறைந்த அளவிலான பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி இணைப்பு பட்டாசுகளை உற்பத்தி செய்ய அனுமதி அளிப்பதே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும்.

8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ள பட்டாசு தொழில் இன்று இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இந்த கோரிக்கையை அவசரத் தேவையாக கருதி தொழிலாளர்களின் நலனை பாதுகாக்க பட்டாசு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் ராஜா சந்திரசேகர் அளித்த மனுவில், "பண்டிகை காலங்களில் மாசு கட்டுப்பாட்டு சட்டத்தில் விலக்கு அளிக்க வேண்டும். பட்டாசு கடைகளுக்கு மாதிரி சட்டம் உருவாக்க வேண்டும். பட்டாசுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைக்க வேண்டும். பட்டாசு தொழில் நல வாரியம் ஏற்படுத்த வேண்டும்" என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது, பாஜக பொதுச் செயலாளர் இராம. சீனிவாசன் உடன் இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x