Published : 21 Nov 2023 05:27 PM
Last Updated : 21 Nov 2023 05:27 PM

இந்தியாவிலேயே கழிவுநீர் ஓடும் ஒரே தேசிய நெடுஞ்சாலை: சுகாதார சீர்கேடாக மாறிய பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு-வி.கோட்டாதேசிய நெடுஞ்சாலையில் தேங்கியுள்ளகழிவுநீரில் கடந்து செல்லும்வாகன ஓட்டிகள்.

வேலூர்: பேரணாம்பட்டு நகராட்சி 10-வது வார்டில் உள்ள தரைக்காடு பகுதியில் இருந்து வெளியேறும் மொத்த கழிவுநீரும் வெளியேற வழியில்லாமல் வி.கோட்டா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியுள்ளது. இந்தியாவிலேயே கழிவுநீர் ஓடும் தேசிய நெடுஞ்சாலையாக மாறியுள்ள இந்த பகுதியில் சுகாதாரச் சீர்கேடு மோசமான நிலையில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள பேரணாம்பட்டு நகராட்சி மக்கள் தொகை சுமார் 80 ஆயிரம் பேர் உள்ளனர். நகராட்சி அந்தஸ்து இருந்தாலும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் பேரூராட்சி நிர்வாக அளவிலேயே உள்ளது. மக்கள் நெருக்கடி நிறைந்த நகரம் தன்னை விரிவாக்கி கொள்ளாமல் முடங்கியுள்ளது.

நகராட்சியில் உள்ள பெரும்பாலான வார்டுகளில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, 10-வது வார்டில் பேரணாம்பட்டு-வி.கோட்டா தேசிய நெடுஞ்சாலையையொட்டி மக்கள் வசிக்கும் இடம் மோசமான சுகாதாரச் சீர்கேடாக உள்ளது. இங்குள்ள தரைக்காடு பகுதி குடிசைகள் அதிகம் நிறைந்த இடமாகவும், கூலி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இடமாகவும் உள்ளது. சுமார் 1,000 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் இந்த பகுதியில் இருந்த மழைநீர் கால்வாய் நெடுஞ்சாலையையொட்டி சென்று அருகே உள்ள பேரணாம்பட்டு ஏரியில் கலக்கிறது. ஒரு காலத்தில் மழைநீர் கால்வாயாக இருந்த நிலை மாறி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது.

இதற்கிடையில், காட்பாடி-வி.கோட்டா தேசிய நெடுஞ்சாலை பணி தொடங்கியபோது மழைநீர் வடிகால்வாய் தூர்ந்துபோன நிலையில் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தேங்க ஆரம்பித்தது. தேசிய நெடுஞ்சாலை சார்பில் இந்த பகுதியில் மழைநீர் வடி கால்வாய் அமைத்தாலும் அதை யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதிலிருந்து ஒரு சொட்டு மழைநீர் கூட ஏரிக்கு செல்ல முடியாத அளவுக்கு கட்டியுள்ளனர். மோசமான கட்டுமான பணியால் கடந்த சில ஆண்டுகளாகவே தேசிய நெடுஞ்சாலையில் தேங்கும் கழிவுநீரில் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் தேங்கி அதில் பயணிக்க வேண்டிய கட்டாயம் இருப்பது பேரணாம்பட்டு நகரில்தான். தேசிய நெடுஞ்சாலை வசம் உள்ள இடத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் அங்கு கழிவுநீர் கால்வாயும் கட்ட முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து, பேரணாம்பட்டு நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘பேரணாம்பட்டு நகராட்சியிலேயே மிகவும் மோசமான சுகாதாரச் சீர்கேடு நிறைந்த இடமாக தரைக்காடு குடியிருப்பு பகுதி உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் தேங்கும் கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் சுகாதாரச் சீர்கேடான பகுதியாக மாறிவிட்டது.

இதை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளா மல் இருப்பதுடன், அதை சரி செய்வதற் கான எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை என்பதுதான் வேதனையான உண்மை. கழிவுநீர் தேங்கும் பகுதியில்தான் நகராட்சி நல வாழ்வு மையமும் உள்ளது. அங்கு தேங்கியுள்ள கழிவுநீரை கடந்துதான் நோயாளிகள் சிகிச்சைக்கு செல்ல வேண்டியதை பார்க்க வேடிக்கையாக உள்ளது. மேலும், கழிவுநீர் தேங்கும் பகுதியை இரு சக்கர வாகனத்தில், நடந்து செல்பவர்கள் கடந்து செல்லும்போது இலகுரக வாகனங்கள் அல்லது பெரிய சரக்கு வாகனங்கள் செல்லும்போது சாலையில் தேங்கும் கழிவுநீர் தெறித்து மக்கள் மீது விழுகிறது.

இதையெல்லாம் சகித்துக்கொண்டுதான் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பிரச்சினை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தொடரும் என தெரியவில்லை. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கியும், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவது கவலையாக உள்ளது’’ என்றனர். இது தொடர்பாக பேரணாம்பட்டு நகராட்சி மன்றத் தலைவர் பிரேமா வெற்றிவேல் தரப்பில் விசாரித்தபோது, ‘‘தரைக்காடு பகுதியில் கழிவுநீர் செல்லும் வகையில் அங்கு ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். ‘பொக்லைன்' இயந்திரம் மூலம் பள்ளமாக இருக்கும் இடத்தை சரி செய்து கழிவுநீர் வெளியேற வழிவகை செய்யப்படும்’’ என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x