Published : 21 Nov 2023 02:48 PM
Last Updated : 21 Nov 2023 02:48 PM

புத்தேரி ஏரியில் இருந்து திடீரென வெளியேறிய நச்சு நுரை: அதிர்ச்சியில் குரோம்பேட்டை மக்கள்

குரோம்பேட்டை புத்தேரியில் கழிவுநீர் கலப்பதால் கலங்கல் பகுதியில் நுரையாக பொங்கி வெளியேறும் நீர். படம்: எம். முத்துகணேஷ்

குரோம்பேட்டை: பல்லாவரம் - துரைப்பாக்கம் 200 அடி ரேடியல் சாலை அருகே புத்தேரி ஏரி உள்ளது. தற்போது மழை காரணமாக புத்தேரி ஏரியில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இந்த ஏரியை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில் இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், புத்தேரி ஏரியில் கலக்கிறது. பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத இந்த ஏரியில் நச்சுப் பொருட்களும், கழிவுகளும் தேங்கியிருந்தது. திடீரென பெய்த மழையால், அந்த ஏரியிலிருந்து அதிக அளவில் நச்சு நுரை வெளியேறியது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக புத்தேரி ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் இடம் நுரையாக காணப்படுகிறது. இதை அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்து செல்கிறார்கள். மேலும் ஏரி நீர் கறுப்பு நிறத்துக்கு மாறி துர்நாற்றம் வீசுகிறது.

காற்றின் வேகத்தால், 5 அடி உயரத்துக்கு மேல் இந்த நுரை எழுந்து அருகிலுள்ள சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்தது. இதனால், காற்றில் நுரை பறந்து அந்த வழியாக சென்றவர்களின் மீது விழுந்தது. சிறிது நேரத்தில் நுரை பட்ட இடத்தில் அரிப்பு ஏற்பட்டதால், அதிர்ச்சிக்குள்ளான மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த நுரையில் புற்றுநோய் ஏற்படுத்தும் நச்சுப் பொருட்கள் அதிக அளவில் கலந்திருப்பதாக கூறப்படுகிறது. பொங்கி வழியும் நுரையை கண்டு மக்கள் பீதிக்குள்ளாகின்றனர். இதனால் கழிவுகள் கலந்து, நச்சு நுரை வெளியாவதை தடுக்க மாநகராட்சி தண்ணீர் பீய்ச்சி கட்டுப்படுத்தி வருகிறது. ஏரியில் கழிவுநீர் மற்றும் ரசாயனம் கலப்பதால்தான் இந்த வெள்ளை நுரை உருவாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, ஏரியை பாதுகாக்கவும், அங்கு கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதுகுறித்து தாம்பரம் மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, புத்தேரி ஏரியை சுற்றி உள்ள பகுதியில் பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிந்த பின்னர் ஏரியில் கழிவுநீர் கலப்பது முழுவதும் தடுக்கப்படும். மேலும் ஏரியில் உள்ள ஆகாயத்தாமரை அகற்றப்பட்டு வருகிறது. மேலும், பம்மல், நாகல்கேணி பகுதியை சுற்றி உள்ள லெதர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவு நீர், ஜி.எஸ்.டி. சாலையை கடந்து புத்தேரி ஏரியில் கலந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது ஏரியில் கலந்து வரும் கழிவுநீர் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சரத் லோகநாதன்

'சுமை பெருக சுத்தம் செய்' அமைப்பின் துணை தலைவர் சரத் லோகநாதன் கூறியதாவது: புத்தேரி ஏரி ௮ப்பகுதியில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளுக்கு நிலத்தடி நீராதாரமாக விளங்குகிறது. இந்நிலையில், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலப்பதால், ஏரியில் நுரை பொங்கி வருகிறது. தாம்பரம் மாநகராட்சியில் உள்ள பெரும்பாலான ஏரிகளில் ஆபத்தான‌ ரசாயன‌ கழிவு, எண்ணெய் கழிவு மற்றும் டிடர்ஜென்ட் கழிவு உள்ளிட்டவை அதிகளவில் கலக்கின்றன. இதனால் அனைத்து ஏரிகளும் கடுமையாக மாசடைந்து, ஏரி நீர் விஷமாக மாறியுள்ளது. இதனால் ஏரிகளில் உள்ள மீன், தவளை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் உயிரிழக்கின்றன. நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதால், சுற்று வட்டார மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை.

பல இடங்களில் போர்வெல் தண்ணீரில் சாக்கடை நாற்றம் வீசுகிறது. ஏரியில் வெள்ளை நுரை உருவாக கழிவு நீர் கலப்பது, ரசாயனம் கலப்பது உள்ளிட்டவை முக்கிய காரணமாகும். நுரை உருவாகாமல் தடுக்க மழை காலத்துக்கு முன்பாக ஏரியை சுத்தம் செய்திருக்க வேண்டும். கழிவுநீா், ரசாயனம் ஏரி தண்ணீருக்குள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியமாகும். சுற்றுச்சூழல் அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இதுகுறித்து பல முறை மாநகராட்சிக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆனால் மாநகராட்சியும், அரசும் மாசடைந்த ஏரிகளை சுத்தப்படுத்தாமல் காலதாமதம் செய்து வருகின்றன. தொழிற்சாலைகளின் ரசாயன, எண்ணெய் கழிவுகள் ஏரியில் கலப்பதை தடுக்கவில்லை. இதில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தாம்பரம் மாநகராட்சியில் உள்ள ஏரிகளை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x