Published : 19 Jan 2018 10:10 AM
Last Updated : 19 Jan 2018 10:10 AM

உணவுப் பொருள் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்: குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

உணவுப் பொருள் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று இந்திய ஏற்றுமதியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு விருது வழங்கும் விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.

இந்திய ஏற்றுமதியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தென்மண்டல ஏற்றுமதி சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில், குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கடந்த 2015-16, மற்றும் 2016-17ம் ஆண்டுகளில் மண்டல அளவிலும், தமிழகம், கேரளா, கர்நாடாகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களிலும் சிறப்பாக செயல்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

உலகளவிலான வர்த்தகம் 2017-ல் 2.4 சதவீதத்தில் இருந்து 3.6 சதவீதமாக வளர்ந்துள்ளதாக உலக வர்த்தக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவும் வர்த்தகத்தில் வளர்ந்து வருகிறது. பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில் இந்தியா 3-வது இடத்தை விரைவில் எட்டும் என கூறப்படுகிறது.

இதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். அடித்தட்டு மக்களும் நாட்டின் வளர்ச்சியை உணர வேண்டும். அதன் பலனை அனுபவிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். சுயநலத்தை விட பொதுநலன் முக்கியம் என முன்னோர்கள் கூறியிருப்பதை எல்லோரும் கருத்தில் கொள்ள வேண்டும்.

பணமதிப்பிழப்பு என்பது அப்போதைக்கு வலியாக இருந்தாலும், எதிர்காலத்தில் வளத்தை அளிக்கும். இதன் மூலம் வீடுகளில், கழிப்பறைகள், தலையணைகளில் இருந்த பணம் வங்கிகளுக்கு வந்துள்ளது. அதே நேரம் பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான முகவரியும் கிடைத்துள்ளது.

ஜிஎஸ்டி அமலாக்கத்தை உலக நாடுகள் பாராட்டுகின்றன. யாரும் தங்கள் பாக்கெட்டில் இருந்து பணத்தை கட்டவில்லை. மக்களிடம் இருந்து பெற்ற பணத்துக்கான வரியை மட்டுமே செலுத்துகின்றனர். இதன் மூலம் மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகின்றன.

நாட்டில் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். உணவு பதப்படுத்தும் தொழில் வளர்ச்சி அடைய வேண்டும். ஏற்றுமதியாளர்கள், உணவு பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேலும், இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தின் திருப்பூரைப் போல், நாட்டின் இன்னும் பல திருப்பூர்கள் உருவாக வேண்டும். இளைஞர்கள் வேலை தேடுவதை விடுத்து, தொழில்முனைவோராக உருவாக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, வேணுகோபால் எம்பி, ஏற்றுமதியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கணேஷ்குமார் குப்தா, தென்மண்டல தலைவர் ஏ.சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x