Published : 18 Nov 2023 04:43 PM
Last Updated : 18 Nov 2023 04:43 PM

நெல்லையில் இருந்து தாமதமாக புறப்பட்டாலும் 7 மணி 18 நிமிடங்களில் சென்னை சென்று சிறப்பு வந்தே பாரத் ரயில் சாதனை!

திருநெல்வேலி: திருநெல்வேலியிலிருந்து 1 மணி 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டாலும் சென்னைக்கு 7 மணி 18 நிமிடங்களில் சிறப்பு வந்தே பாரத் ரயில் சென்றடைந்தது. குறிப்பிட்ட நேரத்தில் 18 நிமிடங்கள் மட்டுமே தாமதம் ஏற்பட்டது. ரயில்வே பணியாளர்களின் நடவடிக்கைகளுக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்று திருநெல்வேலி- சென்னை இடையே கடந்த செப்டம்பர் 25-ம் தேதி வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்ட பயணிகளிடம் இந்த ரயில் சேவை வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தீபாவளி மற்றும் பண்டிகை கால கூட்ட நெரிசலை குறைக்கும் பொருட்டு வியாழக்கிழமை தோறும் சென்னை - திருநெல்வேலி இடையே சிறப்பு வந்தே பாரத் ரயில்கள் நவம்பர், டிசம்பர் முழுவதும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. இதன்படி நேற்று முன்தினம் சிறப்பு வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியது. சென்னையிலிருந்து நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு புறப்பட்ட இந்த ரயில் பிற்பகல் 2 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பை அடைந்தது. பின்னர் 3 மணிக்கு திருநெல்வேலியிலிருந்து புறப்பட வேண்டிய ரயிலில் இன்ஜினில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக 1 மணி 15 நிமிடங்கள் தாமதமாக மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு சென்றது. மொத்தம் உள்ள 652 கி.மீ தூரத்தை இந்த ரயில் 7 மணி 18 நிமிடங்களில், அதாவது மணிக்கு 89.9 கிமீ சராசரி வேகத்துடன் சென்னையை சென்றடைந்தது. இன்ஜின் பழுது காரணமாக ஒன்றேகால் மணி நேரம் தாமதமாக புறப்பட்டாலும் கால் மணி நேர தாமதத்தில் சென்னையை சென்று அடைந்ததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வந்தே பாரத் ரயில் 7 மணி 18 நிமிடங்களில் சென்னை
சென்றதை காட்டும் பயண நேர அட்டவணை.

முதல்முறை: திருநெல்வேலி- சென்னை இடையே 110 கி.மீ வேகத்தில் 7 மணி 15 நிமிடங்களில் சென்னையை சென்றடைந்தது ரயில்வே வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்த ரயிலின் வேகம் 130 கி.மீ. ஆக அதிகரிக்கப்படும்போது திருநெல்வேலி- சென்னை இடையே பயண நேரம் 6 மணி நேரமாக குறைய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறும்போது, ‘‘வந்தே பாரத் ரயிலில் ஏற்பட்ட பழுதை ரயில்வே அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் விரைவாக சரி செய்து குறித்த நேரத்தில் சென்னை சென்றடைய வைத்ததற்காக ரயில்வே துறையை பாராட்டுகிறோம். திருநெல்வேலி- சென்னை இடையே 7 மணி 15 நிமிடத்தில் வந்தே பாரத் ரயில் சென்றடைந்து வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது. தென் மாவட்ட மக்களுக்கு வந்தே பாரத் போன்ற அதிவிரைவு ரயில்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x