Published : 02 Jan 2018 10:32 AM
Last Updated : 02 Jan 2018 10:32 AM

புயல் தாக்கி ஒரு மாதமாகியும் மீனவர்கள் கரை திரும்பாததால் குமரி கடலோர கிராமங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் தவிர்ப்பு: கடற்கரையில் மெழுகுவத்தி ஏற்றி மீனவ மக்கள் அஞ்சலி

ஒக்கி புயல் தாக்கி ஒரு மாதம் முடிந்த நிலையில், மாயமான மீனவர்கள் இதுவரை கரை திரும்பாததால் குமரி மாவட்ட மீனவ கிராமங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட்டன. மாயமான மீனவர்களின் குடும்பத்தினர், மீனவ மக்கள் கடற்கரையில் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நவ.30-ம் தேதி தாக்கிய ஒக்கி புயலின்போது சூறைக்காற்றில் படகுகள் சிக்கியதால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகினர். வெளி மாநில கடல் பகுதிகளில் கரை சேர்ந்த மீனவர்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டனர்.

173 மீனவர்கள் மாயம்

கடலில் மூழ்கி பலியான 8 மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 173 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. அதிகபட்சமாக சின்னத்துறையில் 40 மீனவர்களும், நீரோடியில் 34 பேரும், வள்ளவிளையில் 33 பேரும் மாயமாகி உள்ளனர். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் கரை திரும்புவது வழக்கம். ஆனால், மாயமான 173 மீனவர்களும் இதுவரை கரைதிரும்பாததையடுத்து அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால் மீனவ கிராமங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தவிர்க்கப்பட்டது.

இதேபோல் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களும் நேற்று மீனவ கிராமங்களில் நடைபெறவில்லை. கிறிஸ்தவ ஆலயங்களில் திருப்பலி நிகழ்ச்சிகள் மட்டும் நடைபெற்றன. மாயமான மீனவர்களை இறந்ததாகக் கருதி தேங்காய்பட்டினம் கடற்கரையில் அவர்களது உறவினர்கள் மற்றும் மீனவ மக்கள் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

மிடாலம், மேல்மிடாலம், இனயம், ஹெலன்நகர், இனயம்புத்தன்துறை, ராமன்துறை, முள்ளூர்துறை மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள், பெண்கள் இதில் பங்கேற்றனர்.

விதியை தளர்த்த வேண்டும்

இதுகுறித்து தெற்காசிய மீனவ தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் கூறும்போது, ‘ஒக்கி புயலில் சிக்கி கரை திரும்பாத மீனவர்கள் டிசம்பர்25-க்குப் பிறகும் வரவில்லை என்றால் அவர்களை இறந்தவர்களாக அறிவித்து இறப்புச் சான்றிதழ் வழங்க அரசிடம் வலியுறுத்தியிருந்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆழ்கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பாவிட்டால் 7 ஆண்டுகளுக்குப் பின்னரே அரசு அவர்களை இறந்தவர்களாக அறிவிக்கிறது. சுனாமி, ஒக்கி புயல் போன்ற பேரிடர் நிகழும்போது இதற்கான காலவரையறையைத் தளர்த்தி, 173 மீனவர்களையும் இறந்தவர்களாக அறிவிக்க வேண்டும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x