Published : 17 Nov 2023 03:46 PM
Last Updated : 17 Nov 2023 03:46 PM

“ஒவ்வொரு மாநில மக்களையும் நடுங்கச் செய்கிறது மதவாத, மானுட விரோத அரசியல்” - முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் | கோப்புப்படம்

சென்னை: "அரசியல் மாண்புகளையோ மாநில உரிமைகளையோ மதிக்காத மத்திய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. மதவாத, மொழி ஆதிக்க, மானுட விரோத அரசியல் ஒவ்வொரு மாநில மக்களையும் நடுங்கச் செய்கிறது. இவை எல்லாவற்றுக்கும் எதிரான நல்ல தீர்ப்பை 2024-ஆம் ஆண்டில் மக்கள் எழுதப் போகிறார்கள்" என்று திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "உத்தமர் காந்தியைக் கொன்ற கொடியவன் கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளில், கோட்சே வாரிசுகளின் அரசியல் அதிகார அராஜகத்தை எதிர்த்து, பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கொள்கை வாரிசுகளான நம் திமுக உடன்பிறப்புகள் உரிமைப் போருக்கான ஆற்றல் மிக்க ஜனநாயகப் படையின் வீரர்களாக இருசக்கர வாகனத்தில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

நவம்பர் 15-ம் நாள் குமரி முனையில் தொடங்கிய இந்தப் பேரணி தென்மாவட்டங்களை உள்ளடக்கிய வள்ளுவர் மண்டலத்திலும், மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய பெரியார் மண்டலத்திலும், வடமாவட்டங்களை உள்ளடக்கிய அண்ணா மண்டலத்திலும், காவிரிப் படுகை மாவட்டங்களை உள்ளடக்கிய கருணாநிதி மண்டலத்திலுமாக 234 தொகுதிகளுக்கும் 13 நாட்களில் சென்று, மொத்தமாக 8 ஆயிரத்து 647 கிலோ மீட்டர் பரப்புரை பயணம் மேற்கொண்டு நவம்பர் 27-ம் நாள் சேலத்தில் நிறைவடைகிறது. அந்த சேலத்தில்தான் டிசம்பர் 17-ஆம் நாள் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு – மாநில உரிமை மீட்பு மாநாடாக எழுச்சிமிக்க இளையோரின் புதுப் பாய்ச்சலுடன் நடைபெறவிருக்கிறது.

தாய்க் கழகத்துக்குப் பெயர் சூட்டப்பட்ட சேலம் மாநகரில் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கும் நிலையில், உங்களில் ஒருவனான நான் ஒரு தாயின் மனநிலையுடன் காத்திருக்கிறேன். இன்று திமுகவின் தலைவராக, தமிழகத்தின் முதல்வராக உங்களின் பேரன்புடன் பொறுப்புகளை வகித்தாலும் ஏறத்தாழ 35 ஆண்டுகள் திமுக இளைஞரணியை சுமந்தவனல்லவா, அது பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து, உயர்ந்து நிற்கும் காலம் வரை அதன் வளர்ச்சி ஒன்றே என் சிந்தனையாக, செயல்பாடாக அமைந்தது.

ராபின்சன் பூங்காவில் தொடங்கிய இயக்கத்தின் தொடர்ச்சிதான் ஜான்சிராணி பூங்காவில் உருவான இளைஞரணி. “விருப்பமுள்ளவராம் பதவியில் பல பேர்… அவர் வேண்டாம்! நெருப்பின் பொறிகளே! நீங்கள்தாம் தேவை!’ என்று தலைவர் கருணாநிதி தன் 21-ஆம் வயதில் இளைஞராக இருந்தபோது எழுதிய கவிதை வரிகளுக்கேற்ப, கட்சியின் துணை அமைப்பாகவும், எந்த நெருக்கடியிலும் துணை நிற்கும் அமைப்பாகவும் திகழ்ந்தது இளைஞரணி. தலைவர் கருணாநிதி ஆணையிட்டால் ஏவுகணை போல எதிரிக் கூட்டம் நோக்கிப் பாயும் பட்டாளமாக இளைஞரணி செயல்பட்டது.

திமுக அப்போது எதிர்க்கட்சியாக இருந்தது. தலைவர் கருணாநிதி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும், மக்கள் மனதில் தமிழினத் தலைவராகவும் வீற்றிருந்தார். தமிழகத்தின் அரசியல் சக்கரத்தைச் சுழற்றும் அச்சாணியாகத் திகழ்ந்தார். அவர் ஆணையிட்டால் போதும், அரை நாள் அவகாசத்தில் பல லட்சம் பேர் குவிந்துவிடுவார்கள். ஊர்வலமா, கண்டன ஆர்ப்பாட்டமா, மறியலா, மாநாடா எதுவாக இருந்தாலும் அந்த லட்சம் பேரில் லட்சியப் படை வீரர்களாக இளைஞரணியின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். இலங்கைத் தமிழர் உரிமை காக்கும் போராட்டம், இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கின்ற போராட்டம், ஆளுங்கட்சியின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத போராட்டம் எனக் கட்சி முன்னெடுக்கும் களங்களில் இளைஞரணி முனைப்புடன் பங்கேற்கும்.

‘வெட்டி வா என்றால் கட்டி வரக் கூடியவர்கள் என் உடன்பிறப்புகள்’ என்று தலைவர் கருணாநிதி சொல்வார். இளைஞரணி எனும் கொள்கைப் படை வெட்ட வேண்டியதை வெட்டி, அவற்றை முறையாகக் கட்டி, வீச வேண்டிய இடத்தில் வீசிவிட்டு, கடமையை நிறைவேற்றிய வீரர்களாகத் தலைவர் கருணாநிதி முன் நிற்கும். தான் வளர்த்த பிள்ளை, தன் தோளுக்கு மேல் வளர்ந்து, தானே தன் கடமைகளை முனைப்புடனும் சிறப்புடனும் நிறைவேற்றும் ஆற்றலைப் பார்த்து மகிழும் தாயின் மனநிலையுடன், தம்பி உதயநிதியையும் அவர் தலைமையிலான இளைஞரணியில் உள்ள ஒவ்வொருவரின் செயலாற்றலையும் கண்டு மகிழ்கிறேன்.

அரசியல் மாண்புகளையோ மாநில உரிமைகளையோ மதிக்காத மத்திய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் கூட மதிக்காத நியமனப் பதவிக்காரர்களின் அடாவடிகள் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கின்றன. மதவாத, மொழி ஆதிக்க, மானுட விரோத அரசியல் ஒவ்வொரு மாநில மக்களையும் நடுங்கச் செய்கிறது. இவை எல்லாவற்றுக்கும் எதிரான நல்ல தீர்ப்பை 2024-ஆம் ஆண்டில் மக்கள் எழுதப் போகிறார்கள்" என்று அக்கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x