

சென்னை: “திமுக இளைஞரணியை உதயநிதி சிறப்பாக முன்னெடுத்து வருவதைக் கண்டு தந்தையாக அல்லாமல், கட்சியின் தலைவராக மகிழ்கிறேன்” என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக இளைஞரணி தொடங்கப்பட்ட தினத்தை முன்னிட்டு, கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதிய வாழ்த்துக் கடிதத்தில், ''1980-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் மதுரை ஜான்சிராணி பூங்காவில் இளைஞரணி உருவாக்கப்பட்டது. உங்களில் ஒருவனான என்னிடம் இளைஞரணியின் செயலாளர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகவும், ஈழத் தமிழர் நலன் காத்திடுவதற்காகவும், அன்றைய ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை எதிர்த்தும் திமுக தலைவர் அறிவித்த ஜனநாயகப் போர்க்களங்களில் முன்னின்று சிறைச்சாலைகளை நிரப்பியது இளைஞரணி.
அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டபோதும், சமூக நீதிக் காலவர் வி.பி.சிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற தேசிய முன்னணி தொடக்க விழாவின்போதும் இந்திய துணைக்கண்டமே ஆச்சரியமடையும் வகையில் சென்னையில் இளைஞரணியின் வெண்சீருடை அணிவகுப்பு அமைந்தது. அதுவரை ஊர்வலம் எனச் சொல்லப்பட்டு வந்ததை, பேரணி என மாற்றிய பெருமை திமுகவின் இளைஞரணிக்கே உரியது.
இளைஞரணி தொடங்கப்பட்டு 42 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது அதனை தம்பி உதயநிதி சிறப்பாக முன்னெடுத்து வருவதைக் கண்டு தந்தையாக அல்லாமல், கட்சியின் தலைவராக மகிழ்கிறேன். காலத்திற்கும் களத்திற்கும் ஏற்ற வகையில் அதன் செயல்பாடுகள் தொடரவேண்டும். நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தல் களத்தில் தம்பி உதயநிதியும் அவரது இளைஞரணிப் பட்டாளத்தினரும் ஆற்றிய முனைப்பான பணிகள் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மகத்தான வெற்றிக்குத் துணை நின்றன.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் எதிர்ப்பு, நீட் விலக்குப் போராட்டம், கரோனா கால நிவாரணப் பணிகள் ஆகியவற்றில் இளைஞரணியின் பங்களிப்பை ஒரு தாயின் உணர்வுடன் கவனித்து பெருமை கொண்டேன். இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்து சிறப்பான கருத்தரங்கை நடத்தி, அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு தொகுதியிலும் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
'அனைவருக்கும் அனைத்தும்' என்ற உன்னத லட்சியத்தைக் கொண்ட இயக்கத்தைக் கட்டிக்காக்கும் பெரும்பணியில் இளைஞரணிப் பட்டாளத்தின் உறுதிமிக்க செயல்பாடுகள் தொடர்ந்திட தாயுள்ளத்தோடு வாழ்த்துகிறேன்'' என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.