Published : 17 Nov 2023 04:35 AM
Last Updated : 17 Nov 2023 04:35 AM

30 குண்டுகள் முழங்க தமிழக அரசு மரியாதையுடன் மார்க்சிஸ்ட் தலைவர் சங்கரய்யா உடல் தகனம்

முன்னதாக, பெசன்ட் நகர் மின்மயானத்தில் சங்கரய்யா உடலுக்கு பிரகாஷ் காரத் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள், மூத்த தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சென்னை: தமிழக அரசு மரியாதையுடன் 30 குண்டுகள் முழங்க, மார்க்சிஸ்ட் முதுபெரும் தலைவர் சங்கரய்யா உடல் தகனம் செய்யப்பட்டது. கட்சியின் மூத்த தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத்,ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் வீரவணக்கம் செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா தனது 102-வது வயதில் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், குரோம்பேட்டையில் உள்ள இல்லம் மற்றும் தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று கட்சி அலுவலகத்தில் சங்கரய்யா உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், அசோக் தவாலே, ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி,மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக எம்.பி. ஆ.ராசா, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘இந்து’ என்.ராம், சென்னைமாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், நடிகர்கள் சத்யராஜ், பார்த்திபன் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

காலை 10 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சங்கரய்யா உடல் பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

வழிநெடுகிலும் பொதுமக்கள், சங்கரய்யா உடலுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கட்சியினர் செங்கொடி ஏந்திபேரணியாக நடந்து வந்தனர். கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், ‘இந்து’ என்.ராம் உள்ளிட்டோரும் உடன் நடந்து வந்தனர்.

பிற்பகல் 12 மணி அளவில் இறுதி ஊர்வலம் பெசன்ட் நகர் மின் மயானத்தை அடைந்தது. அங்கு, சங்கரய்யா உடலுக்கு குடும்பத்தினர் சார்பில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

கட்சியின் மூத்த தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், அசோக் தவாலே, கேரள மாநிலச் செயலாளர் கோவிந்தன், மேற்கு வங்க மாநிலச் செயலாளர் முகமது சலீம், அகில இந்திய மாதர் சங்கத் தலைவர் மதி உள்ளிட்டோர் வீரவணக்கம் செலுத்தினர். அங்கு நடந்த இரங்கல் கூட்டத்தில் சீதாராம் யெச்சூரி பேசும்போது, ‘‘சங்கரய்யா காட்டிய வழியில் இறுதி வரை பயணிப்போம்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து, 30 குண்டுகள் முழங்க, தமிழக அரசு சார்பில் சங்கரய்யா உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x