Published : 15 Nov 2023 08:41 PM
Last Updated : 15 Nov 2023 08:41 PM

8 ஆண்டுகள் சிறை, 3 ஆண்டுகள் தலைமறைவு, எண்ணிலடங்கா போராட்டங்கள்... - சங்கரய்யா நினைவலைகள்!

சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா | கோப்புப் படம்

சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 102. தமிழகத்துக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவருக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மறைந்த சங்கரய்யாவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர் இந்நிலையில், ‘இந்து தமிழ் திசை’யில் மூத்த பத்திரிகையாளர் இரா.ஜவஹர் எழுதிய கட்டுரை இங்கே மறுபகிர்வாக...

நாட்டின் சுதந்திரத்துக்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் போராடி, எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து, எண்பது ஆண்டுகளாக மக்கள் பணி செய்துகொண்டு, எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் தோழர் சங்கரய்யா. கோவில்பட்டியில் வசதியான குடும்பத்தில் நரசிம்மலு - ராமானுஜம் இணையருக்கு இரண்டாவது மகனாக, 1922-ல் சங்கரய்யா பிறந்தார். அவரது தாய்வழிப் பாட்டனார் ராமசாமி, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். ‘குடியரசு’ இதழின் சந்தாதாரர். பாட்டனார் வீட்டில் வளர்ந்த சங்கரய்யா, பெரியார், சிங்காரவேலர் போன்ற தலைவர்களின் எழுத்துகளைப் படித்து, முற்போக்குச் சிந்தனையுடனே வளர்ந்துவந்தார்.

பள்ளிப் படிப்பை முடித்ததும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இண்டர்மீடியட் படிப்பும், பட்டப் படிப்பும் படித்தார். சுதந்திரப் போராட்டம் எழுச்சி பெற்ற காலம் அது. அமெரிக்கன் கல்லூரி மாணவர்களும் இதில் பங்கேற்றார்கள். சுதந்திரக் கோரிக்கைக்காக மட்டுமல்லாமல், தீண்டாமை ஒழிப்பு, தமிழ் வளர்ச்சி போன்றவற்றிலும் அப்போதே ஈடுபாடு காட்டினார் சங்கரய்யா.

இந்தியை எதிர்த்து முதல் போராட்டம்: நீண்ட நெடிய போராட்ட வரலாறு கொண்ட சங்கரய்யாவின் முதல் போராட்டமே இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்ததுதான். அன்றைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர் ராஜாஜி. அவர் 1938-ல் உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் சட்ட மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதற்குப் பெரியார், சிங்காரவேலர், ஜீவா போன்ற தலைவர்களும், தமிழ் அறிஞர்களும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதையடுத்து மதுரைக்கு வந்த ராஜாஜிக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாணவர் சங்கரய்யா பங்கேற்றார்.

அப்போது தோழர்கள் ஏ.கே. கோபாலன், சர்மா ஆகியோர் மதுரையில் மாணவர்கள் மத்தியில் கம்யூனிஸப் பிரச்சாரம் செய்துவந்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டத் தலைவர் ஏ.கே. கோபாலன். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம் அது. எனவே, காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் அவரும் மற்ற கம்யூனிஸ்டுகளும் பணியாற்றிக்கொண்டு ரகசியமாகக் கம்யூனிஸ்ட் பிரச்சாரம் செய்துவந்தார்கள். விரைவிலேயே சங்கரய்யா, கம்யூனிஸ்ட் ஆதரவாளர் ஆனார்.

கம்யூனிஸ்ட் தலைவர்களின் வழிகாட்டலில், மதுரையில் நடந்த மாணவர் சங்க மாநாட்டில் சங்கத்தின் செயலாளராகச் சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து பல்வேறு மாணவர் இயக்கங்களை அவர் தலைமை தாங்கி நடத்தினார். இதனால் அமெரிக்கன் கல்லூரியின் வெள்ளைக்கார முதல்வர், சங்கரய்யாவை அழைத்து “மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) கொடுக்கிறேன். வேறு கல்லூரியில் சேர்ந்து கொள்” என்று மிரட்டினார். அதற்கு சங்கரய்யா “டி.சி. கொடுத்தால் மாணவர் வேலைநிறுத்தம் நிச்சயமாக நடக்கும்” என்று எச்சரித்தார். அத்துடன் முதல்வர் தனது மிரட்டலை நிறுத்திக்கொண்டார்.

மதுரையில் முதல் கிளை: இந்தச் சூழ்நிலையில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை ரகசியமாக அமைக்கப்பட்டது. சங்கரய்யா உள்ளிட்ட 9 பேர் இதில் உறுப்பினர்களானார்கள். செயல்பாடுகள் வேகமெடுத்தன. 1941-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திக் கைதானார்கள். இந்த அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். சங்கரய்யா தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைதானார். அதோடு அவரது கல்லூரிப் படிப்புக்கும், அவரை வழக்கறிஞராக்க வேண்டும் என்ற அவரது தந்தையின் கனவுக்கும் முற்றுப்புள்ளி விழுந்தது.

“பி.ஏ. இறுதித் தேர்வு எழுத 15 நாட்களே இருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டீர்களே. அப்போது எவ்வாறு உணர்ந்தீர்கள்?” என்று பிற்காலத்தில் ஜி.ராமகிருஷ்ணன், சங்கரய்யாவைக் கேட்டார். அதற்கு சங்கரய்யா “அப்போது நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டம் தீயாகப் பற்றிப் பரவியது. இதில் நானும் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்ததே என்ற உற்சாகம்தான் எனக்கு ஏற்பட்டது” என்று பதில் கூறினார்!

கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை 1942 ஜூலையில் நீக்கப்பட்டது. அப்போது நடந்த மாணவர் சங்க மாநாட்டில் தமிழகப் பிரிவின் பொதுச் செயலாளராகச் சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகஸ்ட் மாதத்தில், ”வெள்ளையனே வெளியேறு!” இயக்கத்தைத் தொடங்க காங்கிரஸ் முடிவு செய்தது. காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களை விடுதலை செய்யக் கோரி, மாணவர்களைத் திரட்டி இயக்கம் நடத்தினார் சங்கரய்யா. பாளையங்கோட்டையில் நடந்த போலீஸ் தடியடியில் படுகாயம் அடைந்தார். அக்டோபர் மாதத்தில் அவர் மீண்டும் கைதுசெய்யப்பட்டுச் சிறையிடப்பட்டார். 1944-ல் காந்தியும் மற்ற அரசியல் கைதிகளும் விடுதலையானார்கள். சங்கரய்யாவும் விடுதலையானார். கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

கிளர்ந்தெழச் செய்த காலம்: அன்றைய காலகட்டம் பற்றி என். ராமகிருஷ்ணன் இப்படி விவரிக்கிறார்: “யுத்தகால நெருக்கடி காரணமாக அரிசி, மண்ணெண்ணெய், விறகு, சாதாரணத் துணி போன்றவை கிடைக்காத சமயத்தில், கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டி, பெரும் போராட்டங்களை நடத்திய காலகட்டமாகும். மதுரை ஹார்வி மில்லின் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள், கூலி உயர்வுக்கும், தொழிற்சங்க உரிமைகளுக்கும் கிளர்ந்தெழுந்து போராடி வெற்றி கண்ட காலகட்டமாகும். கம்யூனிஸ்டுகள்மீது காங்கிரஸ்கார்கள் கட்டவிழ்த்துவிட்ட தாக்குதல்களை முறியடித்த காலமாகும். கலை, இலக்கியம், ஆடல், பாடல் என்பதைப் பயன்படுத்தி, உழைக்கும் மக்களைக் கிளர்ந்தெழச் செய்த காலமாகும்.”

இந்த இயக்கங்கள் அனைத்திலும் பெரும் பங்கேற்றார் சங்கரய்யா. அப்போதுதான் வரலாற்றுச் சிறப்பு மிக்க கடற்படையினர் போராட்டமும் நடந்தது. இதை ஆதரிக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது. கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. இந்த ஆதரவுப் போராட்டத்தை மதுரையில் நடத்தினார் சங்கரய்யா. துப்பாக்கியைக் காட்டி போலீஸார் மிரட்டியபோதும் போராட்டம் நடந்தது. அதே காலத்தில்தான் மதுரைச் சதி வழக்கு போடப்பட்டு பி. ராமமூர்த்தி, சங்கரய்யா உள்ளிட்ட ஏராளமான கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறையிடப்பட்டார்கள். இந்திய சுதந்திரத்துக்கு முதல் நாள், இரவில்தான் இவர்கள் விடுதலையானார்கள்.

சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்குச் சுதந்திர இந்தியாவிலும் ஓய்வில்லை. முன்னைவிட அதிகப் பொறுப்புகளும் பணிகளும் காத்திருந்தன. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலும், 1964 முதல் மார்க்சிஸ்ட் கட்சியிலும், உயர் பொறுப்புகள் வந்துசேர்ந்தன. மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலாளர், மத்தியக் குழு உறுப்பினர், விவசாயிகள் சங்கத்தின் தமிழக, அனைத்திந்திய நிர்வாகி, மூன்று முறை எம்.எல்.ஏ. உள்ளிட்ட பல பொறுப்புகளை அவர் வகித்துத் திறம்படச் செயலாற்றினார். உழைக்கும் மக்கள் உரிமை பெறச் சிறப்பாகத் தொண்டாற்றினார். எட்டு ஆண்டுகள் சிறைவாசம், மூன்று ஆண்டுகள் தலைமறைவு, எண்ணி லடங்காப் போராட்டங்கள் என்று வாழ்ந்த போராளி சங்கரய்யாவின் தொண்டு மகத்தானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x