Published : 15 Nov 2023 05:47 PM
Last Updated : 15 Nov 2023 05:47 PM

“எளிய வாழ்க்கை, கொள்கைப் பற்று, அஞ்சாத போர்க்குணம்...” - என்.சங்கரய்யாவுக்கு தலைவர்கள் புகழஞ்சலி

சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா | கோப்புப் படம்

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 102. தமிழகத்துக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவருக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மறைந்த சங்கரய்யாவுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின்: “பொதுத் தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த இச்செஞ்சட்டைச் செம்மலுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலமாக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என இந்த ஆண்டு ஜூலை 15 அன்று நான் அறிவிப்பு செய்திருந்தும், தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றை அறியாத, குறுகிய மனம் படைத்த சிலரது சதியால் அது நடந்தேறாமல் போனதை எண்ணி இவ்வேளையில் மேலும் மனம் வருந்துகிறேன். தகைசால் தமிழர், முனைவர் மட்டுமல்ல, அவற்றிற்கும் மேலான சிறப்புக்கும் தகுதி வாய்ந்த போராளிதான் தோழர் சங்கரய்யா.”

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி: “எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பேரன்பைப் பெற்ற சங்கரய்யா, விடுதலைப் போராட்டத்துக்காக தனது கல்லூரிப் படிப்பை துறந்ததோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவராகவும், மாணவர் அமைப்பு முதல் வயது முதிர்வு வரையிலும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர். பல்வேறு போராட்டங்களை நடத்தி, தொழிலாளர்களின் உற்ற தோழனாகவும் விளங்கியவர். மேலும் சாதி வர்க்கம், ஆதிக்கம், அடக்குமுறைகளை தனது வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வாழ்ந்தவர்.”

பாமக நிறுவனர் ராமதாஸ்: “தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை வரலாறும், அரசியலில் அவர் கடைபிடித்த நேர்மையும், ஒழுக்கமும் இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும். அத்தகைய சிறப்பு மிக்க தலைவரின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த இடதுசாரி இயக்கங்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.”

காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி: “தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தொழிலாளர் வர்க்கத்துக்காகவும் தமது வாழ்நாள் முழுவதும் உரிமைக் குரல் எழுப்பி பல்வேறு போராட்டங்களை நடத்தி பலமுறை சிறை புகுந்தவர். எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு மக்களோடு மக்களாக தொண்டால் பொழுதளந்த தூய்மையான தலைவர். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்வதற்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.”

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: “பல்வேறு சிறப்புக்களின் கொள்கலனாக திகழ்ந்த பெருமைக்குரிய லட்சியப் போராளியான என்.சங்கரய்யாவின் மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பாகும். ஜனநாயகம் காக்கவும், மதச்சார்பின்மை மதநல்லிணக்கம் பேணவும், தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்கவும் களத்தில் நிற்கும் அனைவருக்கும் நாடு முழுக்க உள்ள தோழர்களுக்கும் போராளித் தலைவர் சங்கரய்யாவின் பிரிவு அளவு கடந்த துயரத்தை அளிக்கிறது.”

இந்திய கம்யூ. மாநில செயலாளர் இரா.முத்தரசன்: “ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் மதுரை மாவட்டத்திலும், சுற்று வட்டாரத்திலும் கட்சி அமைப்புகளையும், விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் அமைப்பு ரீதியாக திரட்டி போராடியவர். நாட்டின் விடுதலைப் போராட்டம் மற்றும் மக்கள் நலப் போராட்டங்களில் பங்கேற்று பலமுறை சிறைச் சென்றவர். சிறு வயது தொடங்கி இறுதி மூச்சு சுவாசித்த காலம் வரை நெறி சார்ந்து வாழ்ந்து பொது வாழ்விற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் தோழர். என்.சங்கரய்யா.”

விசிக தலைவர் திருமாவளவன்: “எளிய வாழ்க்கை, சமரசமற்ற கொள்கைப் பற்று, அடக்குமுறைக்கு அஞ்சாத போர்க்குணம் ஆகியவற்றுக்கு சான்றாகத் திகழ்ந்தவர் சங்கரய்யா. காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி எனத் தமிழகத்தின் பல்வேறு மூத்த தலைவர்களோடு அரசியல் பணியாற்றியவர். விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காக சமரசம் இன்றிப் போராடியவர். தோழர் என்.சங்கரய்யாவை அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்வதுடன், அவரது நினைவாக சென்னையில் மணிமண்டபம் ஒன்றை அரசு அமைக்க வேண்டும்.”

முன்னாள் முதலவர் ஓ.பன்னீர்செல்வம்: “எளிமையான வாழ்க்கை முறையை கடைபிடித்ததோடு, கதர் ஆடை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். அனைவரிடத்திலும் அன்போடும், பண்போடும் பழகக்கூடியவர். எளிமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் சங்கரய்யா என்று சொன்னால் அது மிகையாகாது. அவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. அவரது இழப்பு தமிழகத்துக்கு மட்டுமல்ல தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பு ஆகும்.”

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது இருந்த 36 தலைவர்களில் சங்கரய்யாவும் ஒருவர் என்பது குறிப்படதக்கது. பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோருடன் அன்பாக பழகியவர். தமிழகத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் சுதரந்திர போராட்ட வீரர்களோடு இணைந்து மக்கள் பணியாற்றிய பெருமை சங்கரய்யாவையே சேரும்.”

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தேமுதிக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: இந்திய சுதந்திர போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், அடித்தட்டு மக்களுக்கான போராட்டம், விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம் என தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்த அப்பழுக்கற்ற பொதுவாழ்வின் தலைவர் தோழர் என்.சங்கரய்யாவின் இழப்பு கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்குமான பேரிழப்பாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x