Published : 06 Jan 2018 10:13 AM
Last Updated : 06 Jan 2018 10:13 AM

நடிகர் சங்க கட்டிடத்துக்கு நிதி திரட்ட மலேசியாவில் இன்று நட்சத்திர கலைவிழா: ரஜினி, கமல் பங்கேற்பு

நடிகர் சங்க கட்டிடத்துக்கு நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் இன்று நட்சத்திர கலைவிழா நடக்கிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இதில் கலந்துகொள்கிறார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக திரைத்துறையினர் கலந்துகொள்ளும் கலை நிகழ்ச்சிகள், கிரிக்கெட் போட்டி உள்ளிட்டவைகளை நடத்த நடிகர் சங்கம் திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மலேசியாவில் உள்ள புக்கிஜாலி ஸ்டேடியத்தில் நடக்கும் நட்சத்திர கலைவிழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.

காலை 10 மணிக்கு தொடங்கும் கலை நிகழ்ச்சிகள், இரவு 10 மணி வரையிலும் பல்வேறு பிரிவுகளில் நடக்கிறது. நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளும் நடன நிகழ்ச்சிகள், காமெடி நிகழ்ச்சிகள், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி, கால்பந்து போட்டி ஆகியவை இதில் இடம்பெறும்.

விஜய், அஜித் பங்கேற்கவில்லை

நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்பதற்காக, ரஜினிகாந்த் நேற்று மலேசியா புறப்பட்டு சென்றார். அவருடன் விஷால், கார்த்தி, ஆர்யா, பரத், பிந்துமாதவி, ஜனனி ஐயர் உள்ளிட்ட திரையுலகினர் புறப்பட்டனர். கமல்ஹாசன், நயன்தாரா உள்ளிட்ட சில முன்னணி திரையுலகினர் இன்று காலையில் மலேசியா செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் விஜய், அஜித் இருவரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மலேசியா சென்றுள்ள ரஜினிகாந்த், நேற்று அந்நாட்டின் பிரதமர் முகமது நஜிப் ரசாக்கை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மலேசிய பிரதமர், “மீண்டும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மலேசியாவில் உங்கள் நேரத்தை சிறப்பாக செலவிடுங்கள்’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x