Last Updated : 11 Nov, 2023 02:28 PM

 

Published : 11 Nov 2023 02:28 PM
Last Updated : 11 Nov 2023 02:28 PM

மாதந்தோறும் ரூ.70 லட்சம் வருவாய் தரும் ஆம்பூர் ரயில் நிலையம் நவீன மயமாகுமா? - பயணிகள் எதிர்பார்ப்பு

ஆம்பூர் ரயில் நிலையத்தின் முகப்பு தோற்றம்.

திருப்பத்தூர்: மாதந்தோறும் ரூ.70 லட்சத்துக்கு மேல் வருவாயை ஈட்டித்தரும் ஆம்பூர் ரயில் நிலையத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் மற்றும் கடந்த சில நாட்களில் 2 உயிரிழப்பு சம்பவம் நடந்துள்ளதால் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய ரயில் நிலையங்கள் முக்கிய ரயில் நிலையங்களாக உள்ளன. ஜோலார்பேட்டைக்கு அடுத்தபடியாக பயணிகள் அதிகம் வந்து செல்லும் ரயில் நிலையமாக ஆம்பூர் ரயில் நிலையம் விளங்கி வருகிறது.

சென்னையில் இருந்து பெங்களூரு மார்க்கமாகவும், சென்னையில் இருந்து கோவை, ஈரோடு, சேலம் மார்க்கமாக தினசரி 150 ரயில்கள் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. நூற்றுக் கணக்கான ரயில்கள் ஆம்பூர் மார்க்கமாக சென்று வந்தாலும், 10 ரயில்கள் மட்டுமே ஆம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இங்கு, வாராந்திர ரயில்கள் 2 மட்டுமே நிற்கின்றன. தோல் தொழிற்சாலை தொழிலில் முன்னணி பெற்று விளங்கும் ஆம்பூர் நகருக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் ஆம்பூர் நகருக்கு வந்து செல்கின்றனர்.

ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தை
கடந்து செல்லும் மூதாட்டி.

குறிப்பாக, கர்நாடக மாநிலம் பெங்களூரு, மைசூரு போன்ற பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான வியாபாரிகள் ஆம்பூருக்கு வந்து தங்களுக்கு தேவையான தோல் தயாரிப்பு பொருட்களை வாங்கி செல்கின்றனர். தீபாவளி, புத்தாண்டு, பொங்கல், நவராத்திரி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை நாட்களில் வியாபாரிகளின் வருகை இரு மடங்காக உயர்கிறது. அவ்வாறு வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகள் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர். ரயில் மூலம் வரும் வியாபாரிகள் ஆம்பூரில் நிற்கின்ற ரயிலில் பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டிருப்பதால் ஆம்பூரில் நிற்கின்ற ரயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

மேற்கூரை மற்றும் பாதுகாப்பு இல்லாமல் குடிநீர் வராத
குழாய் காட்சி பொருளாக இருக்கிறது. நிறுத்தப்படும்
இருசக்கர வாகனங்கள்.

இதனால், மாதந்தோறும் அதிக வருவாயை பெற்று தரும் ரயில் நிலையங்களில் ஆம்பூர் ரயில் நிலையமும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மாதந்தோறும் ரூ.70 லட்சத்துக்கு மேல் ஆம்பூர் ரயில் நிலையம் மூலம் ரயில்வே நிர்வாகம் வருவாயை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. வருவாயை அதிகரித்தாலும், ரயில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆம்பூர் ரயில் நிலையத்தில் இல்லாததால் ரயில் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குடிநீர் வராத குழாய் காட்சி பொருளாக இருக்கிறது.

இதுகுறித்து ஆம்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குமரேசன் என்பவர் ‘ இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘ஆம்பூர் ரயில் நிலையத்தில் தற்போது 3 நடைமேடைகள் உள்ளன. இதில், முதலாவது நடைமேடையின் நீளம் குறைவாக இருப்பதாலும், தாழ்வாக அமைந்திருப்பதாலும் சென்னை நோக்கி செல்லும் ரயில்கள் 1-வது நடைமேடையில் நிற்காமல் 2-வது நடைமேடையில் நின்று செல்கின்றன. 2-வது நடை மேடையில் இறங்கும் பயணிகள் வெளியே வர அங்குள்ள உயர் மேம்பாலத்தை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து 1-வது நடைமேடையை அடைகின்றனர். இதனால், பல நேரங்களில் ரயிலில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் அதிகரிக்கிறது.

ரயில் நிலைய நுழைவு வாயிலில் இருந்த டிக்கெட்
கவுன்டர் தற்போது மூடப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பெரிய அளவில் விபத்துகள் ஏதும் ஏற்படாத நிலையில், கடந்த 10 நாட்களில் 2 விபத்துகளில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் ஆம்பூரில் நடந்துள்ளது. கரோனா பேரிடர் காலத்தில் இங்கு நிறுத்தப்பட்டு வந்த பல ரயில்கள் தற்போது வரை நிற்காமலேயே செல்கின்றன. பல ஊர்களில் இந்த நடைமுறை இல்லை. ஆனால், வருவாயை அதிகம் தரும் ஆம்பூர் ரயில் நிலையத்தில் முக்கிய ரயில்கள் நிற்காமல் செல்வது பொதுமக்களை வஞ்சிப்பதாக உள்ளது. எனவே, பயணிகள் பயன்பெறும் வகையில் ஏற்காடு விரைவு ரயில், யஸ்வந்த்பூர் விரைவு ரயில், வெஸ்ட்கோஸ்ட் விரைவு ரயில், காவேரி விரைவு ரயில், மங்களூரு விரைவு ரயில், பெங்களூரு விரைவு ரயில், கோவையில் இருந்து திருப்பதி வரை செல்லும் விரைவு ரயில், பெங்களூருவில் இருந்து திருப்பதி வரை செல்லும் விரைவு ரயில்கள் ஆம்பூரில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

பூட்டியே கிடக்கும் கழிப்பறை.

அதேபோல, பெங்களூரு, சேலம், கோவையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில்கள் 1-வது நடைமேடையில் நின்று செல்ல ரயில்வே நடைமேடைகளின் கட்டமைப்புகளை சரி செய்ய வேண்டும். பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள், கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், உணவகம் போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ரயில் நிலையம் நுழைவு வாயிலில் டிக்கெட் கவுன்டர் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த கவுன்டர் அங்கிருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டு தொலைவில் உள்ள ஒரு இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் வயதானவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், ஒரே ஒரு டிக்கெட் கவுன்டரும், ஒரு முன்பதிவு கவுன்டர் மட்டுமே உள்ளது. இதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தை
கடந்து செல்லும் இளைஞர்.

இதுதவிர ரயில் நிலையத்தில் குற்றச்செயல்கள் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இதைத்தடுக்க ரயில் நிலையம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். ரயில் நிலையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் ஏற்படுத்த வேண்டும். இரு சக்கர வாகன நிறுத்தும் இடங்களில் மேற்கூரை இல்லை. 2 மற்றும் 3-வது நடைமேடைகளில் மேற்கூரை இல்லாததால் பயணிகள் மழை மற்றும் வெயிலில் பல மணி நேரம் காத்திருந்து ரயிலை பிடிக்க வேண்டியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் எளிதாக செல்ல சாய்தள மேம்பாலம் இல்லை, லிப்ட் வசதி இல்லை, ரயில் வரும் நேரம் குறித்து ஒலி பெருக்கியில் மட்டுமே அறிவிக்கப்படுகிறது.

பார்வையாளர்கள் பார்த்து தெரிந்துக்கொள்ள டிஜிட்டல் அறிவிப்பு பலகை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். மழைக்காலங்களில் மின் நிறுத்தம் ஏற்பட்டால் ரயில் நிலையமே இருட்டாக உள்ளது. ஜெனரேட்டர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்’’ என்றார். இதுகுறித்து ரயில்வே நிர்வாக அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘நாட்டில் பல்வேறு ரயில் நிலையங்களில் தேவையான கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதற்கான பணிகளை ரயில்வே துறை செய்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி போன்ற ரயில் நிலையங்களில் கட்டமைப்பு வசதிகள் நடந்து வருகின்றன. அதன்படி, ஆம்பூர் ரயில்நிலையமும் விரைவில் புதுப்பொலிவுடன் மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்’’ என்றனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x