Published : 10 Nov 2023 06:17 AM
Last Updated : 10 Nov 2023 06:17 AM

ஒருநாள் வேலை நிறுத்தம் எதிரொலி: சென்னை, சுற்றுப்புற மாவட்டங்களில் 50% லாரிகள் ஓடவில்லை

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் 50 சதவீத லாரிகள் இயங்கவில்லை.

வாகனங்களுக்கு உயர்த்தப்பட்ட வரியைக் குறைக்க வேண்டும்,லாரிகள் மீது ஆன்லைன் மூலமாக அதிக எண்ணிக்கையில் வழக்குகள் பதிவு செய்யும் நடைமுறையைக் கைவிட வேண்டும், அதிக எண்ணிக்கையில் மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்டகோரிக்கைகளை லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவியஅளவில் ஒருநாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று தமிழகம் முழுவதும் அத்தியாவசியப் பணிகள் தவிர்த்துபெரும்பாலான லாரிகள் இயங்கவில்லை. சென்னை, செங்கல்பட்டு,திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் 50 சதவீதம் லாரிகள் இயக்கப்படவில்லை.

வேறு வழியின்றி போராட்டம்: இதுகுறித்து தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர்எஸ்.யுவராஜ் கூறியதாவது: பொதுவாக தீபாவளி பண்டிகைபோன்ற நாட்களில் சரக்கு போக்குவரத்து அதிகமாக நடைபெறும் என்பதால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதை விரும்பவில்லை. ஆனால், கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்தும் தொழில்செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதால் வேறு வழியின்றி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோம்.

அதே நேரம், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட லாரி உரிமையாளர்கள் சார்பில் ஏற்கெனவே 2 நாட்கள் வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதில் லாரிகள் முழுமையான அளவில் பங்கேற்றதால் மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் 50 சதவீத லாரிகள் மட்டுமே இயக்கப்படவில்லை.

பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: மணல், கன்டெய்னர், துறைமுகம் சார்ந்த பணிகளில் ஈடுபடும்லாரிகள் முழுமையாக இயங்கின.எம்-சாண்ட் ஏற்றிச் செல்லும் லாரிகள், வெளியூர் செல்லும் லாரிகள் போன்றவற்றில் சில லாரிகள் மட்டுமே இயக்கப்படவில்லை. எங்களது முதன்மை கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை தவிர்த்து இதர கோரிக்கைகள் தொடர்பாக விரைந்து பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x