Published : 08 Nov 2023 06:00 PM
Last Updated : 08 Nov 2023 06:00 PM

அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் அடைக்கும் திட்டம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் காவல் துறை விளக்கம்

அமர் பிரசாத் ரெட்டி | கோப்புப்படம்

சென்னை: பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை தற்போது குண்டர் சட்டத்தில் அடைக்கும் திட்டம் எதுவும் இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட்டது. அனுமதியின்றி கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு காவல் துறையினரும் மாநகராட்சி ஊழியர்களும் சென்று அந்த கொடிக் கம்பத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கொடிக் கம்பத்தை அகற்றுவதற்காக கொண்டு வரப்பட்ட ஜேசிபி வாகனத்தை சிலர் சேதப்படுத்தினர். இது தொடர்பாக கானாத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, பாஜக மாநில நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். பின்னர், அனைவரும் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அமர் பிரசாத் ரெட்டியை மேலும் இரண்டு வழக்குகளில் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், தனது கணவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு தடை விதிக்கக் கோரியும் அவரது மனைவி நிரோஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஜேசிபி இயந்திரம் உடைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடந்த இடத்தில் தனது கணவர் இல்லை. தமிழக அரசு மற்றும் ஆளும் கட்சியான திமுகவின் சமூக விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதால், சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார். போலி பாஸ்போர்ட் வழங்கிய விவாகரத்தில் உளவுத்துறை முன்னாள் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு தொடர்பு இருப்பதாக புகார் கூறியதால் , அவரது நண்பரான தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் மூலம் பொய் வழக்குப் பதிவு செய்து தனது கணவரை குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்" என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தனது கணவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு விடுவார் என்ற அச்சத்தில் மனுதாரர் முன்கூட்டியே இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். ஆனால், தற்போதைய நிலையில் அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, முன்னதாகவே தொடரப்பட்ட வழக்கு எனக் கூறி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x