Published : 25 Jan 2018 09:29 AM
Last Updated : 25 Jan 2018 09:29 AM

விளைபொருட்களுக்கு உரிய விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வலியுறுத்தல்

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலையை நிர்ண யம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வலியுறுத்தியுள் ளார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த லிங்காயத் பஞ்சமசாலி ஜகத்குரு மஹாபீட தர்மக்ஷேத்ர குடலசங்கம் சார்பில் ‘தேசிய பசவ வேளாண் விருது’ வழங்கும் விழா சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் நேற்று நடைபெற்றது. அதில் லிங்காயத் பஞ்சமசாலி ஜகத்குரு பசவ ஜெயமிரிதியுன்ஜய சுவாமி கள் பங்கேற்று எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு தேசிய பசவ வேளாண் விருதை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் எம்.எஸ்.சுவாமிநாதன் பேசியதாவது:

உடல் நலத்துக்கும், வருவாய்க்கும் உணவுதான் அடிப்படை. அதனால் உணவு உற்பத்தியை பெருக்க வேண்டியது அவசியமாகிறது. வேளாண் வளர்ச்சிக்கு விளைபொருட்களைச் சந்தைப்படுத்துவதும், அதற்கான விலை நிர்ணயமும் மிக முக்கிய அம்சங்களாக உள்ளன. பருப்பு வகைகளை அதிக அளவில் உற்பத்தி செய்யுமாறு விவசாயி களுக்கு அறிவுறுத்தினோம். விளைச்சல் அதிகரித்த நிலையில், அதற்கு நல்ல விலை கிடைக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். அதனால் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு அரசு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு நாம் எவ்வளவுதான் ஊக்கமளித்தாலும், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்காவிட்டால் அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப் படும் என்றார்.

பசவ ஜெயமிரிதியுன்ஜய சுவாமிகள் பேசும்போது, “எம்.எஸ். சுவாமிநாதனின் வேளாண் அறிக்கை, விவசாயிகளின் புனித நூலாக பார்க்கப்படுகிறது. அவருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அது அவருக்கு வழங்கப்படும் விரு தாக இல்லாமல் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் வழங்கப்படும் விருதாகவே பார்க்கப்படும்” என்றார். நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த நிகழ்ச்சியில் கர்நாடக மாநிலம் உட்பட பல்வேறு மாநில விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். காவிரியால் கூட இணைக்க முடியாத இந்த விவசாயிகளை எம்.எஸ்.சுவாமிநாதன் இணைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உலக வங்கியில் இருந்து ரூ.6 ஆயிரத்து 600 கோடி கடன் பெற்று கிராமப்புற மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட உள்ளது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை தொடங்க ரூ.40 கோடி தேவை. இதுவரை ரூ.38 கோடி சேர்ந்துள்ளது. சிறு, சிறு தொகையை அனுப்புவதில் பொதுமக்களுக்கு சில சிக்கல் கள் இருப்பதால், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலமாக பொதுமக்களிடம் இருந்து நிதி யைச் சேகரித்து அனுப்ப இருக்கிறோம். இம்மாத இறுதிக்குள் ரூ.40 கோடி சேர்ந்துவிடும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x