Published : 05 Nov 2023 07:51 AM
Last Updated : 05 Nov 2023 07:51 AM

கருணாநிதி நூற்றாண்டு விழா | 30 மாவட்டங்களில் பயணிக்கும் முத்தமிழ் தேர்: கன்னியாகுமரியில் 4 அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கன்னியாகுமரியில் நேற்று பயணத்தை தொடங்கிய, பேனா வடிவிலான முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி.

நாகர்கோவில்: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள இருக்கும் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி கன்னியாகுமரியில் நேற்று புறப்பட்டது.

கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகில் இந்தப் பயணத்தை, அமைச்சர்கள் பெரியகருப்பன், அன்பில் மகேஸ், மனோ தங்கராஜ், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முரசு கொட்டித் தொடங்கிவைத்தனர்.

இதில் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசம்போது, "எழுத்தை மூச்சாகக் கொண்ட கருணாநிதி பயன்படுத்திய பேனாவடிவில் ஊர்தி அமைக்கப்பட்டுள்ளது. அவரது புகைப்படங்கள் ஊர்தியின் வெளியே இடம்பெற்றுள்ளன. அவரது சிறப்புகளை விளக்கும் குறும்படத்தை திரையிடும் வகையில் ஒளித்திரையும் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இந்த ஊர்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்.

வாகனத்தின் உள்ளே முன்னாள்முதல்வர் கருணாநிதி வசித்தகோபாலபுரம் இல்ல உள்வடிவமும், அதில் அஞ்சுகம் அம்மாள்சிலையும், அருகில் கருணாநிதி அமர்ந்திருப்பது போன்ற சிலையும், அவர் பயன்படுத்திய நூலகத்தின் மாதிரி வடிவமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 30 மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் இந்த அலங்கார ஊர்தி, வரும் டிசம்பர் 4-ம் தேதி சென்னைக்கு வரும்”என்றார்.

இந்த நிகழ்ச்சியில், குமரி மாவட்ட ஆட்சியர் தர், விஜய் வசந்த் எம்.பி., சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x