Published : 24 Jan 2018 09:52 PM
Last Updated : 24 Jan 2018 09:52 PM

எல்லை தாண்டும் வெளிநாட்டுப் படகுகளை கட்டுப்படுத்த இலங்கையில் மசோதா தாக்கல்: ரூ.50 லட்சம் முதல் ரூ.17.5 கோடி வரையிலும் அபராதம்

எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகளை கட்டுப்படுத்தும் வகையில் சட்டத்திருத்த மசோதா புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் பெருமளவில் பாதிக்கப்பட்ட இலங்கை வட மாகாணத்தைச் சேர்ந்த மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் 2009-ம் ஆண்டு கடலுக்குச் சென்றனர். அப்போது தமிழக மீனவர்கள் எல்லையைக் கடந்து வந்து தங்களின் கடல் வளங்களையும், வாழ்வாதாரத்தையும் அழித்து வருவதாகக் குற்றம் சாட்டினர். மேலும் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை வடமாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மீனவர்களுக்கும் நடுக்கடலில் அடிக்கடி மோதல் ஏற்பட்டது.

இதனால் இந்திய-இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கடந்த 2010 முதல் 2014-ம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 3 கட்ட மீனவப் பேச்சுவார்த்தைகள் டெல்லி, கொழும்பு, சென்னை ஆகிய நகரங்களில் மத்திய-மாநில அமைச்சகர்கள், மீனவப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றன.

இதில் இலங்கை அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி, ரோலர் மடி, சுருக்கு மடி மீன்பிடி முறைகளை பயன்படுத்தி இலங்கை கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என இலங்கை மீனவப் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்த மீன்பிடி முறைகளை மாற்றிக்கொள்ள 3 ஆண்டுகள் அவகாசம் தேவை எனவும், இலங்கை கடல் பகுதியில் ஆண்டுக்கு 120 நாட்களுக்கு தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்குப் பதிலாக 90 நாட்கள் குறைத்துக் கொள்கிறோம். பாரம்பரியமாக இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடித்து வந்த கடல் பகுதியில் தொழில் செய்யும் உரிமையை இலங்கை மீனவர்கள் மறுக்கக் கூடாது எனவும் தமிழக மீனவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

2010-ம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதே மீன்பிடி முறைகளை மூன்று ஆண்டுகளில் மாற்றிக் கொள்கிறோம் என தமிழக விசைப்படகு மீனவப் பிரதிநிதிகள் உறுதி அளித்திருந்தும் நடைமுறைப்படுத்தாமல் தொடர்ச்சியாக தங்கள் நாட்டுக் கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகளை தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து இலங்கை மீனவப் பிரதிநிதிகள் குற்றம் சாட்டியதால் இதுவரையிலும் நடைபெற்ற மீனவப் பேச்சுவார்த்தைகளில் சுமுக உடன்பாடு எட்ட முடியவில்லை.

தமிழக விசைப்படகு மீனவர்கள் 2014 முதல் 2017-ம் ஆண்டு வரை இலங்கையின் வட மாகாண கடல் பகுதிகளில் மீன்பிடிக்கும்போது இலங்கை தமிழ் மீனவர்களின் வலைகளை நாசப்படுத்திவிட்டுச் செல்வது, மன்னார், யாழ்ப்பாண மாவட்ட மீனவர்களின் வலைகள் மற்றும் நடுக்கடலில் கூடுகளில் பிடிக்கப்படும் மீன்களை திருடிச் செல்வது, மீனவப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை இழுத்தடிப்பது, தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி இலங்கையின் மீன்வளங்களையும், கடலின் சூழலியலையும் அழிப்பதாகக் குற்றஞ்சாட்டி மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தினர்.

இதன் விளைவாக, இலங்கை கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள், படகுகளைக் கொண்டு மீன்பிடிக்கும் அந்நாட்டு மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவது போல, இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கும் விதிப்பதற்கு அந்நாட்டு மீன்வளத் துறையின் சார்பில் யோசனை வழங்கப்பட்டு சட்டத்திருத்தத்தை தயாரிப்பதற்கென தனிக்குழு அமைக்கப்பட்டது.

இதனடிப்படையில் இலங்கை மீன்வளத்துறையின் 59/1979 ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான திருத்த மசோதா புதன்கிழமை இலங்கை பாராளுமன்றத்தில் அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர சமர்பித்தார்.

இந்த சட்டத்திருத்த மசோதா மூலம் 15 மீட்டர் நீளமுடைய படகிற்கு இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ.50 லட்சமும் , 15 முதல் 24 மீட்டர் நீளமுள்ள படகிற்கு ரூ.2 கோடியும், 24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுள்ள படகிற்கு ரூ.10 கோடியும், 45 முதல் 75 மீட்டர் நீள முள்ள படகிற்கு ரூ.15 கோடியும், 75 மீட்டருக்கும் அதிகமுள்ள படகிற்கு ரூ.17.5 கோடி ரூபாய் வரையிலும் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் இலங்கை எல்லைக்குள் அத்துமீறும் வெளிநாட்டுப் படகுகளின் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வழக்கினை ஒரு மாதத்திற்குள் முடித்து வைக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x