Published : 01 Nov 2023 05:32 AM
Last Updated : 01 Nov 2023 05:32 AM

மக்களவை தேர்தலில் புதியவர்களுக்கு வாய்ப்பு: கே.எஸ்.அழகிரி தகவல்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 39-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை, வால்டாக்ஸ் சாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருநாவுகரசர் மற்றும் மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர் | படம்: ம.பிரபு

சென்னை: சென்னை சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:

எல்லைகளை கடந்து தமிழகத்தில் இந்திரா காந்தியைநேசிக்கும் கோடான கோடி மக்கள் இருக்கின்றனர். இதேபோல், இந்தியாவின் எல்லைகளை பலப்படுத்தியவர் வல்லபாய் படேல். இருவரும் வலிமையான அரசை உருவாக்குவதற்கான சிறந்த தலைவர்களாக இருந்தனர். காங்கிரஸ் காலத்தில் வாங்கிய கடனைவிட இப்போது மத்திய பாஜக அரசு அதிக கடன் வாங்கி உள்ளது. அவர்களுக்கு கடன் வாங்க உரிமை இருக்கிறது என்றால் தமிழக அரசுக்கு கடன் வாங்க ஏன் உரிமை இல்லை? தவறான கருத்துகளை தவறாமல் நாள்தோறும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லி வருகிறார். அது தவறு. தன் எல்லைகளுக்கு உட்பட்டுதான் மாநில அரசு கடன் வாங்குகிறது.

ஆளுநர் மாநில அரசை சந்திக்க பயப்படுகிறார், குறை சொல்கிறார், விமர்சிக்கிறார். தமிழக அரசு செயலாளரையோ காவல்துறை தலைவரையோ அழைத்து அவரது குறைகளை சொல்லலாம். ஆனால் அதை விடுத்து பாஜக அலுவலகத்தை நம்பி இருக்கிறார். ஆளுநர் வெளியேற வேண்டியவர் அல்ல, வெளியேற்றப்பட வேண்டியவர்.

வரும் மக்களவைத் தேர்தலில் புதியவர்களுக்கு அதிகளவு வாய்ப்பு வழங்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் இட ஒதுக்கீடு அனைவருக்கும் கிடக்கும். சிதம்பரத்தில் வரும் 6-ம் தேதி சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் குறித்த கருத்தரங்கை நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x