Published : 31 Oct 2023 12:34 PM
Last Updated : 31 Oct 2023 12:34 PM

தமிழகம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார  இலக்கை அடையும் நாள் வெகு தொலைவில் இல்லை: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பல்லாவரத்தில் கேபிட்டல் லேண்ட் குழுமத்தின் ஐடி பூங்காவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: "உற்பத்தி மற்றும் சேவை துறையில் தமிழ்நாடு, உலகளவில் தலைசிறந்து விளங்கி வருகிறது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பலனை ஏற்படுத்தும். இந்த வேகத்தைப் பார்க்கும்போது 2030-ம் ஆண்டுக்குள், ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற எங்களது இலக்கை அடைகிற நாள் வெகுதொலைவில் இல்லை, என்ற நம்பிக்கை எங்களுக்கு வளர்ந்துகொண்டே போகிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை பல்லாவரத்தில் கேபிட்டல் லேண்ட் ரேடியல் ஐடி பூங்கா என்ற தனியார் நிறுவனத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். பின்னர், இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பேசியது: "உலகத்தரம் வாய்ந்த ஒரு தொழில்நுட்ப பூங்காவை, தமிழகத்தில் துவங்குவதற்காக இந்நிறுவனத்துக்கு எனது வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் புதியதொரு தொழிற்புரட்சி நடந்துகொண்டு வருகிறது. அதற்கு சான்றாக ஏராளமான தொழில் நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், கேபிட்டல் லேண்ட் நிறுவனமும் இணைந்திருப்பது பெருமை அளிக்கிறது. 5 மில்லியன் சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த சர்வதேச பூங்காவில், 50,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், பணிபுரியும் அளவுக்கு உலகத் தரம் வாய்ந்த கட்டிடங்களைக் கட்டித்தர நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இது இன்று மிகமிக தேவையானதாக இருக்கிறது.

அதில், இன்று 1.3 மில்லியன் சதுரஅடிக்கான பூங்கா தயார் நிலையில் துவக்கிவைக்கப்படவுள்ளது. இரண்டாவது கட்ட கட்டுமானப் பணிகளைத் தொடங்கியிருப்பதாக, இந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கேபிட்டல் லேண்ட் நிறுவனத்தின் இரண்டாம் கட்டத் திட்டத்துக்கும் தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளிக்கிறேன். நான் கடந்த மே மாதம் சிங்கப்பூருக்கு அரசு பயணமாக சென்றிருந்தேன். அங்கு கிடைத்த வரவேற்பும் உற்சாகமும் மறக்க முடியாதது.

இந்த பயணத்தின்போது, கேபிட்டல் நிறுவனத்தின் சிஇஓ சஞ்சீவ்தாஸ் குப்தாவை சந்தித்து, அவர்களது நிறுவனம் பல தொழில் முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினேன். அதன் தொடர்ச்சியாக இந்த விழா நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. "தட்டுங்கள் திறக்கப்படும்" என்று கூறுவார்கள், அதுபோலவே இது நடந்திருக்கிறது.

எங்களது ஆட்சி மீதும், தமிழகத்தின் மீதும் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொழில்துறையில் முன்னேறிய மாநிலமாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதுமட்டுமின்றி இந்த வளர்ச்சி சீராகவும், பரவலாகவும் இருக்க வேண்டும் என்று மாநிலத்தில் இருக்கின்ற இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களையும் 9 நியோ டைடல் பூங்காக்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதலீடுகளைத் தொடர்ந்து ஈர்க்கின்ற வகையில், உலகத் தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளோடு துறைசார்ந்த தொழிற் பூங்காக்கள் அமைத்துக் கொண்டு வருகிறோம். வளர்ந்து வரும் துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில், துறைசார்ந்த கொள்கை அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறோம். அந்தவகையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள், புத்தாக்கத் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு மையங்கள் ஆகிய திட்டங்களை தமிழகத்தில் பெருமளவு ஈர்ப்பதற்காக திட்டங்களைத் தீட்டினோம்.

உலக அளவில் வேகமாக ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நமது தொழில் துறையும் பயணம் செய்வது, இன்றியமையாத ஒன்று. இதற்கான முயற்சிகளை ஊக்கப்படுத்தி, இந்த துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில்தான், தமிழ்நாடு ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டுக் கொள்கை-2022, கடந்தாண்டு ஜுலை மாதம் என்னால் வெளியிடப்பட்டது. இதன்பின்னர், ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்கம், புத்தொழில்கள் மற்றும் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற துறைகளில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொழில்துறை கல்வியாளர்கள், புத்தாக்கம் மேற்கொள்பவர்கள், மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இது மிகப்பெரும் வாய்ப்புகளை வழங்குகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பாக, உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் Global Capability Centre (GCC)-கள் உடன், எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 30-க்கும் மேற்பட்ட GCC-க்கள், தங்களது புதிய நிறுவனங்கள் அல்லது விரிவாக்கத் திட்டங்களை நிறுவியுள்ளனர். UPS, Walmart, Hitachi Energy போன்ற சர்வதேச நிறுவனங்கள் தங்களது GCC, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களை அண்மையில் நிறுவியுள்ளனர்.

உற்பத்தி மற்றும் சேவை துறையில் தமிழ்நாடு, உலகளவில் தலைசிறந்து விளங்கி வருகிறது. இது மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பலனை ஏற்படுத்தும். இந்த வேகத்தைப் பார்க்கும்போது 2030-ம் ஆண்டுக்குள், ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற எங்களது இலக்கை அடைகிற நாள் வெகுதொலைவில் இல்லை, என்ற நம்பிக்கை எங்களுக்கு வளர்ந்துகொண்டே போகிறது" என்று முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x