Published : 26 Jan 2018 11:32 AM
Last Updated : 26 Jan 2018 11:32 AM

ஜனவரி 31 முதல் 4 நாட்கள் நடக்கிறது: அண்ணா பல்கலை.யில் ‘குருஷேத்ரா’ தொழில்நுட்ப விழா - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கிறார்

அண்ணா பல்கலைக்கழக குருஷேத்ரா தொழில்நுட்ப விழா வருகிற 31-ம் தேதி தொடங்குகிறது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைக்கும் இந்த விழாவில் பொறியியல் மாணவர்களின் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை பார்க்கலாம்.

பொறியியல் மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும், அவர்களிடம் மறைந்துகிடக்கும் கண்டுபிடிப்பு ஆற்றலை வெளிக்கொண்டு வரவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘குருஷேத்ரா’ என்ற பெயரிலான தொழில்நுட்ப விழா கடந்த 12 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. கிண்டி பொறியியல் கல்லூரி தொழில்நுட்ப பேரவை என்ற அமைப்பு இதை நடத்துகிறது.

இந்த ஆண்டுக்கான குருஷேத்ரா தொழில்நுட்ப விழா வரும் 31-ம் தேதி முதல் பிப்ரவரி 3-ம் தேதி வரை 4 நாட்கள் நடக்க உள்ளது. விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கிவைக்கிறார். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் கூறியதாவது:

குருஷேத்ரா சர்வதேச தொழில்நுட்ப விழாவில், தொழில்நுட்பக் கண்காட்சி, பயிலரங்கம், கருத்தரங்கம், நிபுணர்களின் சொற்பொழிவு, வினாடி-வினா என 35-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இதில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 8 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு ரூ.10 லட்சம் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படுகின்றன.

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளான பிரெய்லி பிரின்ட்டர், கார்டியோ கேர், டிராஃபிக் மானிட்டரிங் சிஸ்டம், ஸ்மார்ட் வீல் சேர், ஆட்டோமேட்டிக் எக்யூப்மென்ட் ரிப்பேர் சிஸ்டம், ஒற்றைச் சக்கர வாகனம் உள்ளிட்டவை தொடர்பான புராஜெக்ட்கள் தொழில்நுட்பக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. கண்காட்சிகளை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம். பள்ளி மாணவர்களுக்கு பிரத்யேகமாக நினைவாற்றல், விண்வெளிக் கல்வி தொடர்பான கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போட்டிகளுக்கான பதிவுக் கட்டணம் மூலம் வசூலாகும் தொகை, நலிவடைந்த குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு நன்கொடையாக அளிக்கப்படும். குருஷேத்ரா நிகழ்ச்சி விவரங்களை www.kurukshetra.org.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கண்காட்சியில் இடம்பெற உள்ள பொறியியல் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன், கிண்டி பொறியியல் கல்லூரி டீன் டி.வி.கீதா, மாணவர் ஆலோசகர் சுவாமிநாதன், குருஷேத்ரா தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.கண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x