Published : 21 Oct 2023 05:21 AM
Last Updated : 21 Oct 2023 05:21 AM

இடர்பாடுகால மேலாண்மை குறித்து திட்டமிட வேண்டும்: தமிழக அரசுக்கு டெல்டா விவசாயிகள் வலியுறுத்தல்

கோப்புப் படம்

திருச்சி: தமிழகத்துக்கு காவிரியில் வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகம் முழுமையாக வழங்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவைப் பயிர்கள் நீரின்றிப் பாதிக்கப்பட்டன. மேலும், போதுமான தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணை மூடப்பட்டுள்ளது. இதனால் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி உள்ளது.

டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி இந்த ஆண்டு முழு அளவில் நடைபெறுவதற்கான சூழல் இல்லை என்றும், வடகிழக்குப் பருவமழையை மட்டும் நம்பி சாகுபடியை மேற்கொள்ள இயலாது என்றும் விவசாயிகள் கருதுகின்றனர். எனவே, டெல்டா மாவட்டங்களில் உள்ள 1,665-ஏ பிரிவு வாய்க்கால்கள் அளவில் (மைக்ரோ அளவில்) இடர்பாடுகால மேலாண்மையை அமல்படுத்த தமிழக அரசு திட்டமிட வேண்டும். அப்போதுதான் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கும் என்கின்றனர் விவசாயிகள்.

இதுகுறித்து காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: வடகிழக்குப் பருவமழை வரும் 22-ம் தேதி தொடங்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், மழையை மட்டுமே நம்பி சம்பா சாகுபடியைத் தொடங்குவது இயலாத காரியம். தென்மேற்குப் பருவமழை பெரிய அளவில் இல்லாததால், நிலத்தடி நீர்மட்டமும் பல இடங்களில் குறைந்துவிட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் ஆற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள், செய்வதறியாது திகைத்துள்ளனர்.

ஆறுபாதி கல்யாணம்

மைக்ரோ அளவில்...: இந்த இடர்பாடான சூழலில் விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க மைக்ரோ அளவில் திட்டமிடுதல் அவசியம். இதற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மைக் கல்லூரிகளைச் சேர்ந்த வல்லுநர்கள், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுடன் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி, அந்தந்த கிராம அளவில் திட்டமிடுதல்களை மேற்கொண்டு, அதற்கேற்ற பரிந்துரைகளை செய்து, அவற்றை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

ஒரு வட்டத்துக்கு ஒரு இடத்தில் மட்டும் மழைமானியை வைத்துக்கொண்டு, கிராம அளவில் பெய்யும் மழை குறித்த விவரங்களை எப்படி கணக்கிட முடியும்? எனவே, தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் தானியங்கி மழைமானியை அமைக்க வேண்டும்.

இடர்பாடான இந்த காலகட்டத்தில் நீர் மேலாண்மை, விதைகள் தேர்வு,வேளாண் தொழில்நுட்பம் ஆகியவை குறித்த திட்டமிடுதல்கள் காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து அரசு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x