Published : 18 Oct 2023 04:00 AM
Last Updated : 18 Oct 2023 04:00 AM
உடுமலை: தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்குட்பட்ட மெட்ரோ சிட்டி குடியிருப்பில் வெள்ளநீர்சூழ்ந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.
இது குறித்து ‘மெட்ரோ சிட்டி’ குடியிருப்போர் சங்க நிர்வாகி சிவசாமி கூறியதாவது: ‘மெட்ரோ சிட்டி’ குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள சாலை சிதிலமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன் ஊராட்சி சார்பில் குடிநீர் குழாய் பதிப்புப் பணிக்காக குழி தோண்டினர்.
குழாய் பதிக்கப்பட்ட பின் குழிகள் மூடப்படவில்லை. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக குழிகளில் தண்ணீர் தேங்கியதோடு, வீடுகளைசுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து தனித்தீவுபோல காட்சியளிக்கிறது. குடியிருப்புப் பகுதிக்குள் வர முடியாததால், பள்ளி வாகனங்கள் சற்று தொலைவிலேயே நிறுத்தப்படுகின்றன.
தேங்கியுள்ள மழைநீரில் நடந்து சென்று பள்ளி வாகனத்தில் ஏற வேண்டிய நிலைக்கு மாணவ, மாணவிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடமும், அதிகாரிகளிடமும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்விவகாரத்தில் தலையிட்டு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT