Last Updated : 20 Jan, 2018 10:29 AM

 

Published : 20 Jan 2018 10:29 AM
Last Updated : 20 Jan 2018 10:29 AM

ரூ.8 ஆயிரம் கோடியில் ராணுவ பொறியியல்: கட்டுமானப் பணிகளுக்கு எம்-சாண்ட்10 தமிழக ஆலைகளுக்கு ஆர்டர்

தமிழ்நாட்டில் எம்-சாண்ட் (நொறுக்கப்பட்ட கல்மணல்) தயாரிக்கும் 10 தொழிற்சாலைகளுக்கு அரசு அங்கீகாரம் கிடைத்துள்ளதால் அவற்றுக்கு ராணுவ பொறியியல் சேவை அமைப்பின் ரூ.8 ஆயிரம் கோடி கட்டுமானப் பணிகளுக்கு எம்-சாண்ட் சப்ளை செய்யும் ஆர்டர் விரைவில் கிடைக்கவுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும். மாற்று மணலான எம்-சாண்ட் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தரமான ஆற்று மணல் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இதையடுத்து எம்-சாண்ட் உற்பத்தியை அதிகரிக்கவும் வெளிமாநில மற்றும் வெளிநாட்டில் இருந்து மணல் கொண்டு வரவும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இயங்கும் 120-க்கும் மேற்பட்ட எம்-சாண்ட் தொழிற்சாலைகளில் தரமான எம்-சாண்ட் தயாரிப்பதை உறுதி செய்வதற்காக மாவட்ட பொதுப்பணித் துறை பொறியாளர்கள் எம்-சாண்ட் ஆலைகளுக்கு சென்று தரப்பரிசோதனை மேற்கொள்கின்றனர். பின்னர், சென்னை தலைமையிடத்து பொறியாளரும் எம்-சாண்ட் தரத்தை பரிசோதிக்கிறார்.

அதையடுத்து தமிழக பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் (கட்டிடம்) ஜெய்சிங், சென்னை ஐஐடி பேராசிரியர், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர், இந்திய தரக் கட்டுப்பாட்டு வாரிய இயக்குநர் உட்பட 24 பேர் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு சிறப்புக் கூட்டத்தில் எம்-சாண்ட் ஆலைகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

இதுவரை 10 ஆலைகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. வரும் 22-ம் தேதி மேலும் 14 எம்-சாண்ட் ஆலைகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவின் சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

அரசு அங்கீகாரம் பெற்ற எம்-சாண்ட் என்பதை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், எம்-சாண்ட் எடுத்து வரும் ஒவ்வொரு லாரியின் டிரிப் சீட்டில் ஆலைக்கு அரசு வழங்கிய அங்கீகார எண்ணும், எம்-சாண்ட் பரிசோதனை அறிக்கையும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள 10 எம்-சாண்ட் ஆலைகளில் தினமும் 8 ஆயிரம் லாரி லோடு எம்-சாண்ட் தயாரிக்கப்படுகிறது. அரசு அங்கீகாரம் அளித்துள்ளதால் இந்த 10 ஆலைகளின் எம்-சாண்டுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், ராணுவ பொறியியல் சேவை அமைப்பின் கட்டுமானப் பணிகள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், தெலங்கானா, கேரளா ஆகிய 5 மாநிலங்களில் ரூ.8 ஆயிரம் கோடி செலவில் நடைபெறவுள்ளது. ஆற்று மணல் தட்டுப்பாடு காரணமாக ராணுவ பொறியியல் சேவை அமைப்பின் தென்மண்டல தலைமைப் பொறியாளர் தரமான எம்-சாண்ட் தயாரிக்கும் 10 ஆலைகளின் விவரங்களை தமிழக அரசிடம் கேட்டுப் பெற்றுள்ளார்.

இதன்மூலம் கட்டுமானப் பணிகளுக்கு எம்-சாண்ட் சப்ளை செய்யும் ஆர்டர் 10 ஆலைகளுக்கு கிடைப்பது உறுதியாகியுள்ளது என்று பொதுப்பணித் துறை உயர் அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x