Published : 11 Oct 2023 04:34 AM
Last Updated : 11 Oct 2023 04:34 AM

வணிகர்களுக்கான ‘சமாதான்’ திட்டம் அறிமுகம்: ரூ.50,000 வரை வரி, வட்டி, அபராதம் தள்ளுபடி - முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்

வணிக வரி ‘சமாதான்’ திட்டம் குறித்து சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்.

சென்னை: வணிகர்கள், நிறுவனங்கள் வணிகவரி நிலுவை தொகையை செலுத்த புதிய அணுகுமுறை, கூடுதல் சலுகைகளுடன் கூடிய ‘சமாதான்’ திட்டத்தை சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி, ரூ.50 ஆயிரத்துக்கு குறைவான வரி, வட்டி, அபராதம் நிலுவையில் இருந்தால், அத்தொகை முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். மற்ற வணிகர்கள் குறிப்பிட்ட சதவீத தொகையை செலுத்தி வழக்கில் இருந்து விடுவித்துக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசுக்கு வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைதொடர்பாக 2.11 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில்சம்பந்தப்பட்ட வணிகர்கள், நிறுவனங்களின் எண்ணிக்கை 1.42 லட்சம். நிலுவையாக உள்ள தொகை ரூ.25 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால், வணிகவரி துறையின் பணிச்சுமை அதிகரிப்பதுடன், வணிகர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். அரசுக்கு வரவேண்டிய வருவாயும் பெருமளவில் நிலுவையாக உள்ளது.

இதில் பெரும்பான்மை வழக்குகள் தமிழ்நாடு வணிகவரி சட்டம், மதிப்புக்கூட்டு வரி சட்டம் ஆகியவற்றின்கீழ் நிலுவையில் உள்ளவை. இந்த சட்டங்கள் மற்றும் பல இதர சட்டங்களையும் உள்ளடக்கி, கடந்த 2017 ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி சட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, நடைமுறையில் உள்ளது.

இருப்பினும், ஏற்கெனவே வழக்கில் இருந்த வரிச்சட்டங்களின்கீழ் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, அதன் மீதான வட்டி மற்றும் அபராதம் ஆகியவை இன்னமும் பல வணிகர்களின் பெயரில் நிலுவையில் இருந்து வருகின்றன. நிலுவையை திருப்பி செலுத்துவதில் சலுகைகள் வழங்கப்பட்டு, இந்த பிரச்சினைக்கு முடிவு காண வணிகர்கள் நீண்ட நாளாக முன்வருகின்றனர். இதைகவனமாக பரிசீலித்து, நிலுவை தொகையை வசூலிப்பதில் ஒரு சமாதான திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

இதுபோல கடந்த காலங்களில் பல சமாதான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், புதிய அணுகுமுறை, கூடுதல் சலுகைகளுடன் இத்திட்டம் தற்போது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், வரி மதிப்பீட்டு ஆண்டில் ரூ.50 ஆயிரத்துக்கு குறைவான வரி, வட்டி, அபராதம் செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு நிலுவை தொகை முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும். ஒவ்வொரு வரி மதிப்பீட்டு ஆண்டிலும், ரூ.50 ஆயிரத்துக்கு உட்பட்ட நிலுவை இனங்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.

தமிழக வரலாற்றில் முதல் முறை: தமிழக வரலாற்றில் சிறு வணிகர்களுக்கு முழுமையாக வரி நிலுவை தள்ளுபடி செய்யப்படுவது இதுவே முதல்முறை. அரசின் இந்த முடிவால் 1.40 லட்சம் வழக்குகளில் சம்பந்தப்பட்ட 95,502 வணிகர்கள் நிலுவை தொகை தள்ளுபடியால் பயனடைவார்கள். இவர்களை தவிர, இதர வணிகர்கள், நிறுவனங்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வரை, ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை, ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரை, ரூ.10 கோடிக்கு மேல் நிலுவை என 4 வரம்புகளின்கீழ் கொண்டு வரப்படுவார்கள்.

இந்த 4 வரம்புகளில், முதலில் உள்ளவர்கள் மொத்த நிலுவையில் 20 சதவீதம் அல்லது நிலுவையில் உள்ள வணிகவரி, வட்டி, அபராதத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை செலுத்தி, வழக்கில் இருந்து வெளிவரலாம். இதர 3 வரம்புகளில் உள்ள வணிகர்கள் நிலுவையில் உள்ள வணிக வரி, வட்டி, அபராதத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை கட்டினால் வழக்கில் இருந்து வெளிவரும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு முக்கிய சலுகையாக, நிலுவை தொகையை வணிகர்கள் கட்ட முன்வரும் நாள் வரைஅவர்கள் கணக்கில் ஏற்றப்படக்கூடிய திரண்ட வட்டித் தொகையும் (Accrued Interest) முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்.

4 மாதங்களுக்கு.. இந்த சமாதான திட்டம் அக்.16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். 4 மாதங்களுக்கு, அதாவது 2024 பிப்.15-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அரசின் முயற்சியை வணிகர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பை செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக) எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), ஜவாஹிருல்லா (மமக) ஆகியோர் வரவேற்று பேசினர். இத்திட்டம்முறையாக சிறு வணிகர்களுக்குதான் போகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) கூறினார்.

‘சமாதான்’ திட்டம் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை அமைச்சர் மூர்த்தி நேற்று அறிமுகம் செய்தார். நேற்றே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x