Published : 10 Oct 2023 04:41 AM
Last Updated : 10 Oct 2023 04:41 AM

முதல்வர் ஸ்டாலினுடன் அன்புமணி சந்திப்பு: 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை

சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு சட்டத்தை இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை வைத்தார்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி தலைமையில் கட்சியினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்து ராமதாஸ் எழுதிய கடிதத்தை கொடுத்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டை செயல்படுத்த கோரி மனு அளித்தோம். முதல்வரும் முடிவெடுப்பதாக சொன்னார். 10.5 சதவீதம் இடஒதுக்கீடு சமூக நீதி பிரச்சினை. தமிழகத்தின் வளர்ச்சி பிரச்சினை. மிகப்பெரிய சமூகமான வன்னியர் சமூகம் முன்னேறினால் தமிழகம் வளர்ச்சி அடையும். இதை, சாதி, மதம், இனப் பிரச்சினையாக பார்க்கக்கூடாது.

சாதிவாரி கணக்கெடுப்புக்கும் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால்தான் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க முடியும். பிஹாரை விட மக்கள் தொகை குறைவான தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை எளிதாக நடத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

ராமதாஸ் கடிதம்

முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டப்பூர்வ பணிகள் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு தாமதமாகி வருகிறது. தேவை ஏற்பட்டால் எத்தகைய போராட்டங்களையும் நடத்த பாமக தயாராகவே இருக்கிறது. ஆனாலும், சமூகநீதியில் அக்கறை கொண்ட தாங்கள், ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின்படி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.

வன்னியர்கள் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு 11-ம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அதற்கு முன்பாக ஆணையத்திடமிருந்து பரிந்துரை அறிக்கையைப் பெற வேண்டும். அதனடிப்படையில், பேரவைக் கூட்டத் தொடரில் வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x