Published : 09 Oct 2023 05:08 PM
Last Updated : 09 Oct 2023 05:08 PM

பேரவையில் ஸ்டாலின் Vs இபிஎஸ் முதல் இஸ்ரேல் எல்லைகளில் உச்சகட்ட போர் வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ அக்.9, 2023 

காவிரியில் தண்ணீர் திறக்க தனித் தீர்மானம் நிறைவேற்றம்: சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. அவை மரபுப்படி, காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வினாக்கள் விடைகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கைகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

பின்னர், "தமிழக விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி" தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்

இத்தீர்மானம் முழுமையானதாகவும், நிரந்தர தீர்வை நோக்கியதாகவும் இல்லை எனக் கூறி பாஜக சார்பில் வானதி சீனிவாசன் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து, பேரவையில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தனித் தீர்மானத்துக்கு ஆதரவு ஏன்? - இபிஎஸ் விளக்கம்: "காவிரியில் இருந்து விவசாயிகளுக்கு எப்படியாவது தண்ணீர் கிடைக்க வேண்டும். ஏதாவது வகையில் அவர்களுக்கு தண்ணீர் கிடைத்தால் எங்களுக்கு சந்தோஷம். அதன் அடிப்படையில்தான், இந்த அரசு கொண்டு வந்த தீர்மானத்தை நாங்கள் ஆதரித்து இருக்கிறோம்" என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதனிடையே "காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள தனித் தீர்மானம், முழுமையான, நிரந்தர தீர்வை நோக்கிய தீர்மானமாக இல்லாத காரணத்தால், தமிழகத்தின் நலன் உண்மையாகவே பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறையுடன் செயல்படும் பாஜக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்" என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

பேரவையில் முதல்வர், இபிஎஸ் இடையே காரசார வாதம்: காவிரி பிரச்சினையில் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது முதல்வர் ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.

“மத்திய அரசு மீது நாங்கள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தோம். துணிச்சலோடு தொடர்ந்தோம். அந்த துணிச்சல், உங்களிடத்தில் காணவில்லையே? பார்க்க முடியவில்லையே?" என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் ,"துணிச்சலைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்ன துணிச்சல் என்பது எங்களுக்குத் தெரியும். அதை இங்கு சொல்லி, அவை மரபை மீற வேண்டிய அவசியம் இல்லை. நிச்சயமாக, உறுதியாக பலமுறை காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியிருக்கிறோம். பலமுறை அவையே நடக்கமுடியாத அளவுக்கு செய்திருக்கிறோம்.

ஏதோ சட்டமன்றத்தில், நாங்கள் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற காரணத்தால், அமைதியாக அமர்ந்துள்ளோம் என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசிவிடலாம் என்று கருதுகிறாரா எதிர்க்கட்சித் தலைவர்?" என்றார்.

ரூ.5,381 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்பு: "கருத்து குருடர்களாக இருப்பவர் பலர், இந்து சமய அறநிலையத் துறை தமிழகத்தில் ஆக்கிரமித்துள்ளதாக முழு விவரம் தெரியாமல் பேசி வருகின்றனர். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, 5,381 புள்ளி 65 கோடி ரூபாய் அளவுக்கு திருக்கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன" என்று இந்து சமய அறநிலையைத் துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டப்பேரவையில் கூறியுள்ளாார்.

அரியலூர் அருகே பட்டாசு ஆலை தீ விபத்தில் 10 பேர் பலி: அரியலூர் மாவட்டம் விரகாலூரில் ஏற்பட்ட பட்டாசு ஆலை தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நவம்பரில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள்: தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கும் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளன. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை அறிவித்தது. தேர்தல் குறித்த அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் வெளியிட்டார். அதன்படி, தெலங்கானாவில் வேட்புமனு தாக்கல் நவம்பர் 3ம் தேதி தொடங்குகிறது. சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நவம்பர் 7ம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 17-ம் தேதியும் நடைபெற உள்ளன. மத்தியப் பிரதேசத்தில் வாக்குப்பதிவு அடுத்த மாதம் 17ம் தேதியும், ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 23ம் தேதியும், வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் நவம்பர் 7ம் தேதியும் நடைபெறுகின்றன. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது.

“காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு” - ராகுல்: காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்ற யோசனைக்கு காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளது. இது ஒரு முற்போக்கான நடவடிக்கை. காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவும் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்” என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க பேராசிரியர் கிளாடியாவுக்கு பொருளாதார நோபல் பரிசு: நடப்பு ஆண்டுக்கான பொருளாதார அறிவியல் நோபல் பரிசு, அமெரிக்க பேராசிரியர் கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. "தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்குகள் பற்றிய புரிதலை மேம்படுத்தியதற்காக" கிளாடியா கோல்டினுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் எல்லைகளில் போர் உச்சகட்டம்: ஒரு நிமிட இடைவெளி கூட இல்லாமல் காசாவில் தாக்குதல் நடந்து வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ள நிலையில், அங்கிருந்து இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளன.

சனிக்கிழமை முதல் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்களால் இஸ்ரேல் தரப்பில் 700 பேர் உயிரிழந்தனர். அதில் 260 பேர் ஓர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள். இந்தத் தாக்குதல்களின்போது 100 இஸ்ரேலியர்கள் கடத்தப்பட்டு, காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. அதேபோல், ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் வான்வெளித் தாக்குதல்களால் காசா பகுதியில் வாழ்ந்து வந்த பாலஸ்தீனர்கள் 500 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலின் தென்பகுதியில் ஹமாஸ் தீவிரவாதிகளுடன் ராணுவம் போரிடும் நேரத்தில், வடக்கு பகுதியில் லெபனான் எல்லையில் இருந்து மற்றொரு எதிரியான ஹிஸ்புல்லா தீவிரவாதிகளும் இஸ்ரேல் ராணுவம் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. இருபுறமும் தீவிரவாதிகள் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியதால், எல்லைப் பகுதிகளில் போர் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

அக்.14 வரை ஏர் இந்தியா சேவை ரத்து: இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் அளித்த பேட்டியில், “இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அங்குள்ள இந்தியர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அவர்கள் இந்திய தூதரகத்தை எப்போதும் தொடர்பு கொள்ளலாம். இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் அளிக்கும்” என்றார்.

ஏர் இந்தியா விடுத்துள்ள செய்தியில், “பயணிகளின் பாதுகாப்பு கருதி டெல்லி - டெல் அவிவ் இடையே வாரத்துக்கு 5 நாள் இயக்கப்படும் ஏர் இந்தியா விமான சேவைகள் அக்டோபர் 14-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஏர் இந்தியா வழங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x