“காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” - ராகுல் காந்தி

“காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” - ராகுல் காந்தி
Updated on
1 min read

புதுடெல்லி: நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளதாக அக்கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல், இமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சாகு, பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், செய்தித் தொடர்பு அமைப்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்ற யோசனைக்கு காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளது. இது ஒரு முற்போக்கான நடவடிக்கை. காங்கிரஸ் ஆளும் அனைத்து மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவும் அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்” என்று குறிப்பிட்டார்.

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், "இரண்டு நாட்களுக்கு முன்பாக எங்களின் முக்கியக் குழுக் கூட்டம் கூடியது. அதில், ராஜஸ்தானில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, அதற்கான உத்தரவை ராஜஸ்தான் அரசு பிறப்பித்தது. இன்று, காங்கிரஸ் செயற்குழு அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.

பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வெளியிடப்பட்ட நிலையில், இதன் தாக்கம் மற்ற மாநிலங்களிலும் பிற அரசியல் கட்சிகளிலும் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in