Published : 09 Oct 2023 02:59 PM
Last Updated : 09 Oct 2023 02:59 PM

குலுங்க வைக்கும் கொளத்தூர் சாலைகள்: பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள கோரிக்கை

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் முடிந்து அமைக்கப்படும் சாலைகளை சீராக அமைக்க வேண்டும் என கொளத்தூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னையின் தவிர்க்க முடியாத பகுதியாக விளங்கும் கொளத்தூர், வில்லிவாக்கம் மற்றும் புரசைவாக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட பகுதிகள் இணைக்கப்பட்டு 2011-ம் ஆண்டு உருவானது. அப்போதைய துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் போட்டியிட்டதால், முதல் தேர்தலிலேயே விஐபி தொகுதி பட்டியலில் கொளத்தூர் இடம்பெற்றது. செம்பியம், பூம்புகார் நகர், செந்தில் நகர், சண்முகம் நகர், சீனிவாசா நகர், மக்காரம் தோட்டம் என ஏராளமான பகுதிகள் கொளத்தூரில் உள்ளன.

இத்தொகுதி உருவானதில் இருந்து படிப்படியாக மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் உருவாக்கப்பட்டதோடு, அதை மேம்படுத்தும் பணிகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான், சென்னையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் தொடங்கின. இதனால் சென்னையின் பிற பகுதிகளைப் போலவே போக்குவரத்து மாற்றம், சேதமான சாலைகள் என பல்வேறு சிக்கல்களை கொளத்தூர் மக்கள் எதிர்கொண்டனர்.

தற்போது பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. ஒரு சில இடங்களில் சாலை அமைக்கும் பணிகளைக் கூட மாநகராட்சி தொடங்கி விட்டது. எனவே, பாதாள சாக்கடைக்கான குழிகள், மேடு பள்ளங்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு சீரானமுறையில் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர் கூறியதாவது: கொளத்தூரில் பல ஆண்டுகளாக புதிய சாலைகள் அமைக்கப்படவில்லை. இதனால் ஏற்கெனவே உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால் முதியவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இங்கு வாகனங்களில் வருவோர் பெரும்பாலும் முதுகு வலியுடன் திரும்பும் நிலைதான் இருக்கிறது. இந்த சூழலில் தான் மழைநீர் வடிகாலுக்காக சாலைகள் தோண்டப்பட்டன. பல மாதங்களாக மந்த கதியில் நடைபெற்று வந்த மழைநீர் வடிகால் பணிகள் கடந்த 2 வார காலமாக முழு வீச்சில் நடைபெறுகின்றன.

இதனால் சாலையும் அவசர கதியில் அமைக்கப்படுகின்றன. இதில் பிரச்சினை என்னவென்றால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடிகால் பணி முடிந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சாலைகள் அமைக்கப்படுகின்றன. சாலையின் ஒருபகுதியில் மட்டும் புதிதாக அமைத்துவிட்டு, மறுபகுதி பழையபடியே இருப்பது, கிழிந்த சட்டையில் ஒட்டு போட்டதுபோல் உள்ளது.

முழுமையாக சாலை சீரமைக்கப்படாததால், ஒட்டு போட்ட பகுதிகள் வரும் நாட்களில் விரிசலாக மாறும். பின்னர் சேதமடைந்து மீண்டும் பழைய நிலைக்கே திரும்பும்.

கொளத்தூரில் சேதமான நிலையில் இருக்கும் சாலைகள்.
படங்கள்: ம.பிரபு

மேலும், பாதாள சாக்கடை குழிகளை புதுப்பிக்கும்போது, அவை சாலையின் மட்டத்துக்கு ஏற்ற வகையில் சமதளத்தில் அமைக்கப்படுவதில்லை. சில இடங்களில் சாலை மட்டத்திலிருந்து பள்ளமாகவும், சில இடங்களில் மேடாகவும் அமைக்கப்படுகின்றன. எனவே, மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை மீண்டும் சீரமைக்கும்போது பாதாள சாக்கடை போன்றவற்றை கருத்தில் கொண்டு சம தளத்தில் சாலைகள் அமைக்க வேண்டும்.

ஏனெனில் மீண்டும் சாலைகள் அமைக்க எத்தனை ஆண்டுகளாகும் என்பது தெரியாது. இந்தபணிகளை சரியாக செய்து முடிக்கும் பட்சத்தில் பல ஆண்டுகளுக்கு புதிய சாலைகள் அமைக்க வேண்டியிருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

சீரமைக்கப்பட வேண்டிய பகுதிகள் குறித்து முருகன் என்பவர் கூறியதாவது: கொளத்தூருக்கு உட்பட்ட 64, 65 வார்டு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம். இங்கு மழைநீர் வடிகால் பணிகளுடன் மெட்ரோ ரயில் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக தில்லை நகர் முதல் பிரதான சாலையில் மீண்டும் மீண்டும் சாலைகள் தோண்டப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அவதியடைகின்றனர்.

மேலும், சாலையின் நடுப்பகுதியில் மழைநீர் வடிகால் பணி நடைபெறுகிறது. ஆனால் அந்த சாலையின் தொடக்கமே மோசமாக சேதமடைந்து காணப்படுகிறது. மழைநீர் வடிகால் பள்ளங்களை மூடும்போது, இந்த பகுதிகளையும் சீரமைக்க வேண்டும்.

சீனிவாசா நகர் இரண்டாவது பிரதான சாலையில் பணிகள் முடிந்துள்ளன. ஆனால் தோண்டப்பட்ட இடத்தின் மீது போடப்பட்ட கற்கள், சாலையின் மேல்புறத்தில் வேகத்தடைபோல காட்சியளிக்கிறது. இதுமட்டுமின்றி, பூம்புகார் நகர் 17-வது தெரு போன்ற பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் ஏதும் நடைபெறவில்லை. இருப்பினும், நீண்ட நாட்களாக அந்த சாலை மிக மோசமான நிலையில் உள்ளது.

இதேபோன்ற பெரும்பாலான சிறிய தெருக்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. இது ஒரு புறமிருக்க அவசர கதியில் அமைக்கப்படும் சாலைகள் மழை காலத்தை தாண்டி நீடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மேலும் சீராக சாலைகள் அமைப்பதற்கு துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். ஏனெனில், பாதாள சாக்கடைக்கான இயந்திர நுழைவு குழிகள், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. மழைநீர் வடிகால், சாலைகள் அமைப்பது ஆகியன மாநகராட்சியின் கீழ் வருகின்றன. எனவே, இத்துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே சீரான சமதளத்தில் சாலைகளை அமைக்க முடியும்.

மேலும், போதிய ஆயுட்காலம் உள்ள சாலைகளை மறுசீரமைக்க வேண்டிய அவசியமில்லை என மாநகராட்சி விதிகள் கூறுகிறது. ஆனால் அந்த விதிகளுக்கு உட்படாத வகையில் சாலைகள் மோசமாக உள்ளன. மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் நேரத்தை பயன்படுத்தி மிகவும் மோசமாக உள்ள சாலைகளையாவது சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சாலைகள் அமைப்பது தொடர்பாக 6-வது மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார் கூறும்போது, "மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அனைத்து பகுதிகளுக்கும் சேர்த்தே சாலை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

குறிப்பாக அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக கள ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அப்போது ஆக்கிரமிப்பு போன்றவற்றை அகற்றுவது உள்ளிட்ட பணிகளுக்குப் பிறகே சாலைகள் அமைக்கப்படுகின்றன" என்றார். மக்கள் பயன்பெறும் வகையில் சமமான தளத்தில் தரமான முறையில் சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x